Saturday, June 23, 2007

மிக அருகில் நீ!!!

















கடல் நீர் கூட,
தேனை விட,
இனிமையாக தெரிகிறதே !!!

இந்த உலகம் அனைத்தும்,
என் காலடியில்,
அடிமைப்பட்டு கிடக்கிறதே !!!

இந்த சூரியன் கூட,
வெட்கப்பட்டு கண்
சிவந்து மறைகிறானே !!!

சூரியன் பயந்து போய்,
அவனுக்கு பதிலாக இந்த
நிலாவை அனுப்புகிறானே !!!

நட்சத்திரங்களும் என்னை
முழுமையாக பார்க்க
திராணியற்று மினுமினுக்கின்றன !!!

இவையெல்லாம் ஏன்?
அட அருகில்,
நீ !!!

Sunday, June 17, 2007

என் நண்பன் - நவீன கண்ணன்.

நான் ரவி. என் நண்பன் ராஜா. பொறியற் கல்லூரியின் முதல் வருடத்தில் சந்தித்தேன். அழகானவன் அல்ல. முகத்தில் கவர்ச்சி உள்ளவன். இவனுடன் பேசினால் முதல் ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய அறிவாளி போல் தோன்றும். அடுத்த ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய முட்டாள் போல் தோன்றும். பேசும் கலையில் வல்லவன். இருவர் பேரும் ஒரே எழுத்தில் ஆரம்பிப்பதால் இருவரும் ஒரே பேட்ச். முதல் நாள் லேபில் நாங்கள் இருவரும் வெளியே அனுப்பபட்டோம். வெளியே வந்தோம். "சந்தியா கூட நாம கடலை போடக்கூடாது என்பதற்காக அனுப்பிட்டாண்டா..." என்று வெறுப்புடன் கூறினான். மற்றொரு நாள், வெற்றிகரமாக எக்ஷ்பெரிமெண்ட் செய்து முடித்தான். "எப்படி? எனக்கு சொல்லிக்கொடு." என்றாள் சந்தியா. வழிவான் என்று நினைத்தேன். "உன் ப்ரொவசரிடம் போய் கேளு" என்று வெறுப்புடன் கூறினான்.

புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுப்பான் என்று நினைத்தால் ரசிப்பான். ரசிப்பான் என்று நினைத்தால் கண்டு கொள்ள மாட்டான். கவலை பட தெரிந்தவன் நான். கவலையை ரசிக்க தெரிந்தவன் அவன். இனிக்க இனிக்க பழகினோம். பழக பழக இனித்தான் ராஜா. ஒரு நாள் என்னிடம் சொன்னான், "சந்தியா என்னை காயப்படுத்தறாடா." அவன் கண்ணை பார்த்தேன். கண்ணில் காதல் தெரிந்தது. எலியும் பூனையுமாக இருந்தார்களே? "அவளிடம் சொல்" என்றேன். "வேலை கிடைத்தபின் சொல்கிறேன்". என்று பதில் கூறினான்.

காலம் உருண்டோடியது. கல்லூரியின் இறுதி நாள். வேலை கிடைக்காமல் நான் வருத்தத்தில் இருந்தேன். அவனோ, "வேலை கிடைத்து இருந்தால் என் காதலை அவளிடம் சொல்லி இருப்பேன்." என்று சிரித்து கொண்டு சொன்னான்.

ஒரு வருடத்திற்கு பின்னர் எனக்கு மேற்படிப்புக்கு சீட் கிடைத்தது. அவனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருவனந்தபுரத்தில் அவனுடைய மூன்று மாத ட்ரெயினிங் முடிந்த பின் சந்தித்தோம். சம்பாதிப்பதால் அவன் கண்ணில் நம்பிக்கை ஜொலித்தது. நடுநடுவே ஆங்கிலம் பேசினான். "சந்தியாவிடம் சொன்னியா?" ஆர்வத்துடன் கேட்டேன். புன்னகைத்தான். காதல் தெரிந்த கண்ணில், இப்பொழுது வலி தெரிந்தது. வேறு பேச ஆரம்பித்தோம்.

ஒரு வருடம் கழித்து சந்தியாவிடமிருந்து மின்மடல் வந்தது. கல்யாண வரவேற்பு அது.சட்டென ராஜாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் மொபைல் எண் தேடி கண்டுபிடித்தேன்.

"ராஜாவா??"
"சொல்லுடா ரவி... "
"உன்னை பார்க்கணும். எங்க இருக்க?"
"நுங்கம்பாக்கத்தில் இருக்கிறேன். முக்கியமான விஷயமா?"
"ம்ம்.. அவசியமா உன்னை பார்க்கணும். சாயந்திரம் பார்க்கலாமா?"
"திருவல்லிக்கேணி வந்துரு.... பை."

அவன் அறையில் அன்று சந்தித்தேன். வருத்தத்துடன் இருந்தான். பழைய உற்சாகம் இல்லை. கண்ணில் வெறுமை இருந்தது.

"சந்தியாவிடமிருந்து வந்த மின்மடல் பார்த்தியா?" என்றேன்.
"இல்லையே. என்ன மின்மடல்?" ஆச்சரியத்துடன் கேட்டான்.
"அவளுடைய திருமண வரவேற்பு"

"ஓ!!! என்று திருமணம்?" அலட்டாமல் கேட்டான். வருந்துவான் என்று நினைத்து ஏமாந்தேன்.
"டிசம்பர் 7."
"வாட்???" அலறினான். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயங்கரமாய் சிரித்தான்.
"ஏன்?"

"என் தூரத்து உறவுக்காரப்பெண் ஒருத்தி இருக்கிறாள். தன்யா என்று பெயர். ஆறு மாத பழக்கம். என்னை கவர்ந்தவள். என்னால் ஈர்க்கப்பட்டவள். அவளுக்கு பிடிக்காதவருடன் டிசம்பரில் திருமணமாம். என்னுடன் கூறி வருத்தப்பட்டாள். அதில் சிறு வருத்தத்துடன் இருந்தேன். இப்ப இதை கேட்டவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம்"


"மடையனடா நீ??" கோபத்தின் உச்சிக்கு சென்றேன்.
"இருவருக்கும் வெவ்வேறு நாள் திருமணம் என்றால் நான் இரண்டு நாள் வருத்தப்படணும். ஓரே நாள் வருத்தம். அதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லணும்."

"உன் காதல் உண்மை காதல் இல்லையா?"
"கூல்டா மச்சான்.... ஜெயித்தால் உண்மைக்காதல். தோற்றால் பொய் காதலா? என்ன லாஜிக்?? கீதையில் கண்ணன் என்ன சொல்லி இருக்கிறார்? 'கடமையை செய். பலனை எதிர்பாராதே.' காதல் செய்வது என் வயதுக்கு விதிக்கப்பட்ட கடமை. ஜெயித்தால் திருமணம். தோற்றால், அடுத்த கடமை. அதாவது அடுத்த காதல்."

"கேவலம்டா இது...."
"இதில் என்னடா கேவலம் இருக்கு? என் கம்பெனியில் இருந்து கிளையன்டிடம் ப்ரொபசல் கொடுப்போம். கிளையண்டுக்கு பிடித்தால் எங்களுக்கு ப்ரொஜக்ட் கிடைக்கும். இல்லையென்றால், அடுத்த கிளையன்ட். அடுத்த ப்ரொபசல் என்று போய்க்கிட்டே இருக்கணும்."

"அதுவும் இதுவும் ஒன்றா??"
"எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதாண்டா... நேற்று கிடைக்காததை நினைத்து வருத்தப்பட கூடாது. நாளை கிடைக்க இருப்பதை நினைத்து சந்தோஷப்படக்கூடாது. இன்றைக்கு இந்த நொடியை ரசித்தால் போதும்."
"மனதில் கிருஷ்ணன் என்று நினைப்பா??"

"நான் பெண்களை காதலிக்கும் வரை கிருஷ்ணன். ஒரு பெண் என்னை காதலித்த பிறகு அவளுக்கு மட்டும் நான் ராமன்." என்று கூறி கண்ணடித்தான்.

"உன் அம்மா உனக்கு நல்ல பெண் பார்ப்பாங்கடா...." என்று வாழ்த்தினேன்.

தற்சமயம் அவன் தாய் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சந்தோஷமாக இருக்கிறான், நவீன கண்ணன்.

Friday, June 15, 2007

துப்பட்டா !!!

கல்லூரியில் படிக்கும்போது எழுதிய மொக்கை கவிதை.

உன் தோளில் அசைந்து ஆடுகிறது காவி நிற துப்பட்டா !!!
அதில் நான் வேண்டுமானால் காறி துப்பட்டா !!!

Monday, June 4, 2007

நான் மிகவும் ரசிக்கும் பாடல்.

அனைவரும் ரசிக்கும்படியான இசை. எல்லோருக்கும் புரியும்படியான கவிதை வரிகள். மெய் மறக்க செய்யும் பாலாவின் குரல்.




இப்பாடலில் நான் ரசிக்கும் வரிகள்.
"கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க !!!
பாறைக்குள் வேரை போல வெற்றி கொள்க !!!"

Sunday, June 3, 2007

சிகரெட் - சீக்ரெட்.

என் பதிவில் உள்ள குழந்தையின் படத்தை பார்த்து வந்த பின்னூட்டங்களின் பதிலே இந்த பதிவு.



நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரே ஒரு முறை சிகரெட் பிடித்துள்ளேன். அதன்பிறகு அந்த வாடை கூட எனக்கு பிடிக்கவில்லை. அன்று முதல் இன்று வரை நான் சிகரெட் பிடித்தது கிடையாது. என் நண்பர்களையும் பிடிக்க வேண்டாம் என்று சொல்வேன். அதற்கு மூன்று காரணங்களும் சொல்வேன்.

1. மற்ற கெட்ட பழக்கங்கள், நம்மை மட்டும் பாதிக்கும். இது கூட இருப்பவரையும் பாதிக்கும்.
2. காசை கொடுத்து நம் உடலை நாமே கெடுத்து கொள்வதா? வடுவூர் குமார் சொன்னது போல, சிங்கப்பூரில் சிகரெட் விலை அதிகம். 1 பாக்கெட் சிகரெட் வாங்கும் காசில் இரு வேளை சாப்பிட்டு விடலாம்.
3. ஒரு நாள் ஒரு சிகரெட் குடித்தால், நம் வாழ்நாளில் ஒரு நாள் குறையும்.

ஆகையால் நானும் சிகரெட் பிடிப்பதில்லை, என் நண்பர்களை பிடிக்க அனுமதிப்பதுமில்லை.

இந்த குழந்தை படத்துக்கு வருவோம். இது அழகான குழந்தை. ஒரு கணினி பொறியாளன் சிறு வயதில் எப்படி யோசிப்பான் என்பதை காட்டுவதாக வந்த படம் இது. சிகரெட்டை விட்டுவிட்டு அதன் கை அசைவையும், புருவ அசைவையும், கண் அசைவையும் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும். நான் ஒரு கணினி பொறியாளன். சிறுவயதில் இப்படி இருந்து இருக்கலாம் என்ற என் எண்ணத்தினாலே இந்த படம்.

இதைப்பார்த்து யாரும் கெட்டுப்போக மாட்டார்கள் என்பது என் வாதம்.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னது
"தானாய் பார்த்து கெடாவிட்டால் தன்னை யாரும் கெடுக்க முடியாது. " - நான் சொல்வது.

சொன்னதில் தவறிருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

Saturday, June 2, 2007

சிங்கப்பூர் பற்றி...

இந்தியாவில், சில ஊரில் நான் தங்கி இருந்தாலும், முதன்முதலில் நான் வந்த வெளிநாடு என்பதால் இதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தேன். இங்கு நான் வந்து 6 மாதம்தான் ஆகிறது. ஆகையால் எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதுகிறேன்.

சிங்கப்பூரில் சீனர்கள், தமிழர்கள், மலாய் மக்கள் என்று பல் இனத்து மக்கள் கலந்து வசிக்கின்றனர். இங்கு தமிழ், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவை முக்கிய மொழிகளாக கருதப்படுகின்றன. பல தமிழர்கள் இங்கு மூன்று தலைமுறையாக இங்கு வசிக்கின்றனர்.

இங்கு இருப்பவர்கள், அனைவருக்கும் வேலை தான் முக்கியம். வீண் பேச்சு எதுவும் கிடையாது. ரயில் நிலையத்தில் யாரும் நடந்து செல்ல மாட்டார்கள். கிட்டதட்ட ஓடுவார்கள். இந்த ஓட்டத்தை இந்தியாவின் மும்பையில் மட்டும் பார்த்து இருக்கிறேன். வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் உழைக்கும் நாடு இது.

என்னை மிகவும் கவர்ந்தது இங்கு இருக்கும் ஏகப்பட்ட மரங்களே. இங்கு மரங்கள் பல இருப்பதால் மழை அடிக்கடி பெய்யும். மத்திய ரேகைக்கு கீழே இருப்பதால் இங்கு வெயிலும் அடிக்கும். வெயிலும் அதிகம், மழையும் அதிகம். ஏர்கான் இல்லையென்றால் இங்கு யாரும் உயிர் வாழ இயலாது.

பொழுதுபோக்கு என்று பார்த்தால் 24 மணி நேரமும் ஒலிப்பரப்பாகும் பண்பலை வரிசை ரேடியோ(ஒலி 96.8) உள்ளது. மாலை மட்டும் ஒளிபரப்பாகும் வசந்தம் - சென்ட்ரல் என்ற சேனலும் உள்ளது. மற்றபடி தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சன் - டிவி மற்றும் விஜய் - டிவியும் ஒளிபரப்படும். என்ன ஒரு குறை என்றால் தமிழகத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரம் சென்று இங்கு ஒளிபரப்பாகும்.

போக்குவரத்து பற்றி சொல்லியே தீர வேண்டும். ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு செல்வது இங்கு எளிது. Taxi அடிக்கடி கிடைக்கும். பஷ் மற்றும் ரயில் போக்குவரத்தும் உண்டு. அமெரிக்காவில் படித்த என் நண்பன் சொன்னது. Ez-Link கார்ட் என்று ஒன்று உள்ளது. இதில் பணம் போட்டு Top-up பண்ணிக்கலாம். தேவைப்படும்போது பஷ்ஷிலோ, ரயில் நிலையத்திலோ உபயோகப்படுத்திக்கலாம். இந்த முறை அமெரிக்காவில்கூட இல்லை என்று அமெரிக்காவில் படித்த நண்பன் கூறியுள்ளான்.

இங்கு இருக்கும் பெண்களை பற்றி கூறவில்லையென்றால் இந்த பதிவு முழுமை பெறாது. சீன மக்களுடன் சேர்ந்து வாழ்வதால், தமிழ் கலாச்சாரம் கொஞ்சம் மாறியுள்ளது. ஆகையால் தமிழகத்திலிருந்து வரும் ஆண்களுக்கு இங்கு இருக்கும் பெண்களை பிடிக்கும் வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் கூறப்படும் மொக்கை, அட்டு விகர்கள்தான் அதிகம்.

வேலை பார்ப்போர், படிப்போர், குடும்பத்தோடு வாழ ஒரு அழகான, நிம்மதியான நாடு சிங்கப்பூர் என்று ஐயமில்லாமல் கூறலாம்.