Friday, September 28, 2007

நட்புத்திருநாள்.

நண்பா !

என்னுள் வளர்ந்து,
என்னை காப்பான்,
என்ற எதிர்பார்ப்பில்,
என்னை வளர்த்தாள் என் அன்னை !

உயிர் போனபின்,
உடலுக்கு கொள்ளி வைக்க,
உலகில் சுதந்திரத்தை பறித்து,
உலவ விட்டார் என் தந்தை !

பகைவர்களை அழிக்க,
பாண்டவர்களை ஒழிக்க, கர்ணனை
பக்கத்தில் வைத்து நட்பு
பாராட்டினான் துரியோதனன் !

எல்லோரிடமும் இருந்த
எதிர்ப்பார்ப்பு சிறிதும் இன்றி,
என்னை ஏற்றுக்கொண்ட நீ,
என் உயிரினும் மேலானவன்... !

பி.கு.
"நம் நட்பைப்பற்றி கவிதை எழுதி இருக்கிறேன்." என்ற சொன்னவுடன், ஈஸ்D போன் போட்டு கேட்ட என் உயிர் நண்பனுக்கு இது சமர்ப்பணம்.

Saturday, September 22, 2007

விக்கல் - சிறு(சுழற்சி)கதை

சுந்தரத்திற்கு விக்கலெடுத்தது. 'மனைவி நினைப்பாளா? மகன் நினைப்பானா?' என்று யோசித்தார். 'மகனுக்குத்தான் கல்லூரியின் முதல் நாளாச்சே, அவன் எப்படி நினைப்பான்? அவள் தான் வீட்டில் இருந்து கொண்டு நான் சாப்பிட்டேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பாள்.'

சுந்தரத்தின் மனைவிக்கு விக்கலெடுத்தது. 'கணவனா? மகனா?' குழம்பினார். 'அவருக்குத்தான் அலுவலகம் சென்று விட்டால் வேலைதான் முதல் மனைவி. என் ஞாபகம் எப்படி இருக்கும்? சேகர்தான் நினைத்து இருப்பான். புது இடமல்லவா??'

சேகருக்கு விக்கலெடுத்தது. 'அம்மா, அப்பாவிற்கு என்னை நினைத்து பார்க்க எங்க நேரம் இருக்க போகுது?' என்று நினைத்தவாறே பெண்கள் பக்கம் திரும்பினான். அந்த நொடி வரை அந்த பக்கம் பார்த்து கொண்டிருந்த ஒருத்தி சடாரென்று திரும்பினாள். 'அவள் இன்று காலையில் நான் பைக்கில் வரும்போது பார்த்த தேஜா ஆச்சே!!! அவளா நினைத்து இருப்பாள்??'

தேஜாவிற்கு விக்கலெடுத்தது. 'ஆஹா!!! டெலிபதியில் நான் அனுப்பிய செய்தி ஆகாஷிற்கு கிடைத்து விட்டதா? அழகாய் இருக்கிறான். அழகாய் பைக் ஓட்டுகிறான். அவனை பார்க்கும்போது அவன் பக்கத்தில் இருக்கும் சேகர்தான் அடிக்கடி கெடுக்கிறான். ஆகாஷ், என்னை ஜெயித்து விட்டாய்.'

ஆகாஷிற்கு விக்கலெடுத்தது. 'யாராக இருக்கும்? சுனாமியில் என் அம்மா, அப்பா இறந்து போன பின்னரும், என்னை தன் பிள்ளையாக நினைத்து வளர்க்கும் சுந்தர் சார்தான் நினைப்பார். அவர் பையன், ஆகாஷால் ஊனத்தின் காரணமாக பைக் ஓட்ட முடியாததால் என்னை பைக் ஓட்ட சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அதனால், நான் நல்லபடியாக கூட்டி கொண்டு வந்து இருப்பேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பார். சுந்தரம் சார், உங்கள் பையனை உங்களை விட நன்றாக பார்த்து கொள்வேன்...'
(கதையை திரும்ப முதலில் இருந்து படிக்கவும்.)

பின்குறிப்பு:
இந்த கதைக்கு முடிவு கிடையாது. சுழன்று கொண்டே இருக்கும். அடிக்க நினைப்பவர்கள் மட்டும் பின்னூட்டமிடவும்.

Thursday, September 13, 2007

இறைவன் தந்த வரம்.

"வரம் ஒன்று தருகிறேன்...
கேள்" என்றான் இறைவன்.
கிள்ளி பார்த்தேன். வலித்தது.
நிகழ் காலம் தான்.
ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தேன்.

அம்புலி வரும் என்று
ஏமாந்து அமுதம் உண்ட,
வலிக்கா விட்டாலும்
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய,
குழந்தைப்பருவத்தை கேட்கவா?

ஏன்? எதற்கு? என்றுணராமல்,
பள்ளி ஆசிரியர்களை தெலுங்குப்பட
வில்லன்கள் போல பாவித்து,
படிப்பதை சுமையாக கருதிய
பள்ளிப்பருவத்தை கேட்கவா?

இனிமையில் இனிமையாக இனித்த,
இதயம் மறவா, எல்லோரும்
சென்று வர நினைக்கும்,
நட்பை உயிராக சுவாசித்த
கல்லூரி பருவத்தை கேட்கவா?

காதலியின் முதல் பார்வை,
காதலியின் முதல் ஷ்பரிஷம்,
முதல் முத்தம் கொடுக்க
உதடுகள் தடுமாறிய, காதலை
பருகிய நாட்களை கேட்கவா?

காதல் மனைவியுடன் இருந்த
முதல் சில மாதங்கள், உயிருக்குள்
உயிர் வளர்ந்த பல மாதங்கள்,
பிஞ்சு விரலால் கட்டுப்பட்ட
வாலிப நாட்களை கேட்கவா?

ஆயிரம் பேர் வேலை பார்க்கும்,
வருடம் ஆயிரம் கோடி
லாபம் மட்டுமே தரும், எனது
கனவில் மிதக்கும் எனது
கம்பெனியை தர கேட்கவா?

தீர்க்கமாய் யோசித்து, தெளிவாய்
முடிவெடுப்பதாக நினைத்து கேட்டேன்,
"இன்றைய பொழுதில், இந்த
நேரத்தை, இந்த நொடியை முழுதாய்
அனுபவிக்கும் மனம் வேண்டும்."

அழகாய், அழுத்தமாய், அளவாய்
புன்னகைத்தார். "அப்படியென்றால், ஆப்பிள்
சாப்பிட்டிருக்க கூடாது." நெற்றி சுருங்கி
விரிவதற்குள் மறைந்தார். 'நான்'
அழிந்து 'அது'வாகியிருந்தேன்.

பின் குறிப்பு:-

"உலகில் உள்ள உயிரினங்களில், மனிதனுக்கு மட்டுமே எதிர்காலம், இறந்த காலம் என்று உண்டு" என்று படித்ததை வைத்து எழுதிய கவிதை இது. இறந்த காலத்து வருத்தமும், வருங்காலத்து பயமும் இல்லையென்றால் மனிதன் சந்தோஷமாக இருப்பான் என்பது நம்பிக்கை.

Saturday, September 8, 2007

அம்முவாகிய நான்.. - திரைக்கண்ணோட்டம்.

"என்னய்யா படம் இது, மெதுவான திரைக்கதை. விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு மிக குறைந்த கதாபாத்திரங்கள். இரண்டே இரண்டு வீடு. மாத்தி மாத்தி அதைத்தான் படத்தில் பார்க்கிறோம். பார்த்து பார்த்து அழுத்துப்போன பார்த்திபனுக்கு அதே எழுத்தாளன் கதாபாத்திரம்." என்று அழுப்பு ஊட்டுகிற பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் இறுதி வரை இருக்கையில் அமர வைக்கும் படம்.

படத்தில் புதிய விஷயங்கள் பல இருக்கின்றன. குழந்தை பருவத்தில் இருந்து, விபச்சார விடுதியில் வளரும் கதாநாயகி. மனைவி, குடும்பம், தாம்பத்தியம் என்று வார்த்தைகளின் பொருளை உணர்வுபூர்வமாக உணராத கதாநாயகி தமிழ் திரையுலகத்திற்கு புதுசு. கதாநாயகனை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் பஞ்ச் டயலாக் பேசுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பாதிப்பும் படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைப்பது டைரக்டரின் திறமை.

விபச்சாரத்திற்கென்றே வளர்க்கப்படும் ஒரு பெண்,எழுத்தாளன் ஒருவனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், கலாச்சாரத்தை உணர்வதே கதை. கதா நாயகி தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். முதல் பாதியில் கவரும் அழகுடன் இருப்பதும், பின்பாதியில் குடும்பப் பெண்ணுக்கே உரிய அழகுடன் மிளிர்கிறார். முதலில் கணவரை 'வா... போ' என்று அழைத்து பின்னர், போக போக, 'வாங்க.. போங்க..' என்று கூறுவது அழகு. பழைய கஸ்டமர், அபிஷேக், வாழ்த்தி சென்ற பிறகு, தாம்பத்தியத்தை பற்றி உணர்ந்து கணவனை அழைப்பது மெல்லிய கவிதை.

வளர்த்த பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி விட்டு, அவளுக்கு "நல்ல அம்மாவாக இருந்தேன்." என்று கூறுவதும், அவார்ட் கொடுக்கும் அதாரிட்டி ஒருவர் கையில் மட்டும் இருப்பதும், போன்ற இடைச்சறுகள்களை தவிர்த்து இருந்தால் அம்மு இன்னும் அழகாய் இருந்து இருப்பாள்.

பல இயக்குனர்கள் எடுக்க பயப்படும் சப்ஜெக்டை மிக தைரியமாக எடுத்து, அதை எல்லை மீறாமல் அழகாய் திரையில் உலவ விட்ட இயக்குனருக்கு பெரிய சபாஷ் !!!

Tuesday, September 4, 2007

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

இன்று ஆசிரியர் தினம். எனக்கு பள்ளியில், கல்லூரியில் பாடம் எடுத்த ஆசிரியர்கள் பலர். சிறு சிறு விஷயங்களை கற்று கொடுத்த நண்பர்கள், தோழிகள் கூட என் ஆசிரியர்களே. அவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவர்கள் பேரை எல்லாம் சொல்லி வாழ்த்து சொல்ல ஆரம்பித்தால் விடிந்து விடும். எனவே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த இருவரை பற்றி மட்டும் இப்பதிவில் எழுத போகிறேன்.

முதலாமவர் திரு.வி.ராமநாதன். எங்கள் ஹாஷ்டல் வார்டன் இவர். கல்லூரியில் பேராசிரியர் இவர். மிகவும் அமைதியானவர், ஆனால் அழுத்தமானவர். தலையாட்ட வேண்டிய இடத்தில் மெதுவாக தலை ஆட்டிவிட்டு, 'முடியாது' சொல்ல வேண்டிய திடமாக முடியாது என்பார். யாராவது யாரைப்பற்றி குறை சொன்னால் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கோண்டே இருப்பார். நடுவில் எதுவும் சொல்ல மாட்டார். எல்லாம் கேட்டு முடித்தவுடன், "பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விடுவார்.

இவர் மிகவும் எளிமையானவர். நான் இவரிடம் கேட்ட முதல் கேள்வி, "இங்க வார்டன் யார்?" இவர்தான் என் பெயரில் பதினெட்டாயிரம் ரூபாய்க்கு முதன்முதலில் செக் போட்டு கொடுத்தவர். இறுதி ஒரு வருடம் மட்டுமே இவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொட்டேஷன் வாங்குவது எப்படி,அமைதியாய், அதிகாரமாய் பேசுவது எப்படி போன்ற விஷயங்களை இவரிடம் கற்றுக்கொண்டேன். இவர் என்ன பாடம் எடுத்தார் என்பது சத்தியமாக ஞாபகம் இல்லை.

பின்னாளில் நான் மேனஜரானால், என் மேல் இவரின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

அடுத்தவர் திரு.சுப்புராஜ் அவர்கள். "ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?" என்ற எனது இலக்கணத்துக்கு சிறிதும் மாறாதவர். ரஜினியின் வசனம் 'அதிருதுல்ல...' வசனத்துக்கு சரியான ஆள் இவர்தான். இவரை கண்டாலே எங்க டிபார்மண்டில் உள்ள அனைவரும் மிரள்வார்கள். அதிகம் பேசுபவர், ஆனால் ஆழ்ந்த அர்த்தத்துடன் பேசுவார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வாயால் சொல்லி புரிய வைக்காமல், நடைத்தையில் புரிய வைத்தவர். ஒரு கொள்கை இருந்தால் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். கண் பார்த்து பேசினால் எவரையும் அடக்கலாம் என்பதை இவரை பார்த்த பின்னரே உணர்ந்தேன். எனக்கு தெரிந்து மாணவர்கள் எல்லோரும் நிஜமாக பயந்தது இவருக்கு மட்டுமே.

ஒரு முறை இவரது வகுப்பில், என் நண்பன் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே இருந்தான். அவர், அவனுக்கு மட்டுமே புரியும்படி அவனை அப்பொழுதே மிரட்டினார். அவன் செய்த தவறு கூட மற்ற யாருக்கும் புரியாதபடி பேசினார். இவரிடம் எனக்கு பிடித்த மிக முக்கியமான பழக்கம் - 'பெண்களுக்கு தனியாக சலுகை தர மாட்டார்'

பின்னாளில் நான் ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்குமானால், அவரின் பாதிப்பு என்னிடம் இல்லாமல் இருக்காது.

இரு பிள்ளைகள் இருந்தாலே பெற்றொர்களால் சரிவர கவனிக்க இயலாது. ஐம்பது அல்லது அறுபது பிள்ளைகளை வைத்து கொண்டு திண்டாடும் ஆசிரியர்கள், கடவுளுக்கு மேல்தான்.....

Saturday, September 1, 2007

ஒரு பேய்க்கதை

அவன் அந்த அறையில் நடந்து கொண்டிருந்தான். அந்த அறையில் அவன் மட்டும் இருந்தான். ஒளி குறைவாக இருந்தது. அங்கிருந்த கட்டிலில் ஒரு தலையணை மட்டும் இருந்தது. அங்கிருந்த கடிகாரம் சரியாக 12 முறை அடித்தது. மேலிருந்த பேன் ஓட வில்லை, இருந்தும் அவனுக்கு வேர்க்கவில்லை. பேய்க்கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனிடம் மேலோங்கியது. தரையில் ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அருகில் வெறுமையான மருந்துப்புட்டி மட்டும் இருந்தது. அறையை கழுவி ஒரு வாரம் இருக்கலாம். திடீரென்று அவன் முகம் பிரகாசமானது. அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தான். வாரம் ஏழு லட்சம் பிரதி வெளியாகும் ஒரு வாரப்பத்திரிக்கை அவன் அருகே காற்றில் ஆடியது. காற்று அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்க தன்னை தானே நிறுத்தி கொண்டது. அந்த பக்கத்தில் ஒரு புத்தகத்தின் விமர்சனம் இருந்தது, "எழுத்தாளர் ஜீவ ராகவன் பேய்க்கதை எழுதுவதை நிறுத்திவிட்டு பழையபடி ஆன்மிகக்கதை எழுதலாம். " அவனது கண்கள் எதேச்சையாக அந்த பக்கத்தை பார்த்து சிவந்தது. அந்த பத்திரிக்கையை அறையின் மூலையில் எறிந்தான். தான் எழுதவதை தொடர்ந்தான். சரியாக அவன் எழுத எடுத்துக்கொண்ட நேரம் 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 35 விநாடிகள். முடித்த பொழுது அவனது உடலில் எல்லா பாகங்களும் சந்தோஷத்தில் திளைத்தன. பெருமூச்சு விட்டான்.

அவன் தூக்கி எறிந்த, போன வார பத்திரிக்கையின் கீழே இந்த வார பத்திரிக்கை இருந்தது. அதன் அட்டைப்படத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது. "எழுத்தாளர் ஜீவராகவன் தற்கொலை."

இரண்டு நாள் கழித்து அந்த வாரப்பத்திரிக்கையின் அலுவலகத்தில்,

"என்னையா??? ஏன் இப்படி நடுங்குற???"
"சார், ஒரு வாரத்துக்கு முன்னால் இறந்து போன ஜீவராகவன் அட்ரஸிலிருந்து ஒரு பேய்க்கதை வந்து இருக்கு சார். ஷ்டாம்ப் ஒட்டலை. இரண்டு நாள் முன்னால் அனுப்ப பட்டிருக்கு."
"யோவ், புதுசா எழுதுபவன் தான் கதை ப்ரசுரிக்கப்படணும்னு அந்த அட்ரஷ் போட்டு அனுப்பி இருப்பான்."
"சார், அவர் கையெழுத்து இருக்கு...."
"அப்படியா!! சரி, விடு. அவர் கடைசியா அனுப்பி இருப்பாரு. படித்து பார். நல்லா இருந்தால், அவர் கடைசி கதை என்று பிரசுரம் பண்ணிடலாம்."

அந்த நேரம், அந்த அறையில் இருந்து ஒரு ஆனந்த கூச்சல், யார் காதிலும் கேட்காமல் ஒலித்தது. சற்று நேரத்தில் அந்த அறையில் இருந்து ஒரு வௌவால் சிறகடித்து பறந்தது.