Friday, January 18, 2008

பொறுத்தார் காதலில் வெல்வார்....

கண் திறக்க முடியாமல் தவித்தான். கண் இமையில் யாரோ ஏதோ செய்வது போல் உணர்ந்தான். இப்பொழுது எல்லாம் தெளிவாக தெரிந்தது. இது அவனுக்கு புதிய இடமாக இருந்தது. அவனுக்கு முன்னர் சில ஆண்களும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். வலப்புறம் நகர்ந்து பார்த்தான். நினைத்தபடி நகர்ந்தான் ஆனால் கால் நகராததை அவன் உணரவில்லை.
*********************************************************************

'கண்ணா!! எழுந்திரு!!' என்று கண்ணனின் அம்மா சொல்ல, கஷ்டப்பட்டு கண் விழித்தான் கண்ணன்.

'என்னம்மா?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறேன், அம்மா..' என்றான் போர்வையை இழுத்து போர்த்தியபடி...

'அப்பா கூட ஜாகிங் போ!!' என்று அவன் அம்மா சொல்ல, பீச் போகலாம் என்ற சந்தோஷத்துடன் எழுந்தான்.

'பத்து நிமிஷம்...' என்று சொல்லி பாத்ரூம் ஓடினான்.

சென்னை மெரீனா கடற்கரை....

'டேய் மச்சான், ரகு!!' என்று யாரோ சொல்ல கண்ணனின் தந்தை, ரகு திரும்பி பார்த்தார். அவரது கல்லூரி நண்பர், கார்த்திக் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் அவரது மகளும் நின்று கொண்டிருந்தாள். சிறுபுன்னகையுடன், கார்த்திக்கும், அவரது மகளும் கண்ணனையும் ரகுவையும் நோக்கி வந்தனர்.

'என்னடா தொப்பையை குறைக்க வந்தியா??'

'ஆமாடா... உன டாட்டரா?? உன்னை மாதிரி இல்லாமல் அழகாக இருக்கிறாள்..'

'உன் பையனா?? உன்னை மாதிரி தத்தியா?? இல்லை என்னை மாதிரியா??'

இவர்கள் பேச்சை கவனிக்காமல், கண்ணன் கார்த்திக்கின் மகளை நோக்கி கேட்டான்.
'உன் பெயர் என்ன?'
'ராதா'
***********************************************************
அந்த வரிசை எங்கு முடியுது, என்று எட்டி பார்த்தான். முடியும் இடத்தில் இருவர் கணினியுடன் உட்கார்ந்து இருந்தனர். இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். எந்த மொழி என்று அறிய முயற்சி செய்து தோற்றான். அவர்கள் பேசுவதை, அவர்களுக்கு எதிரில் நின்று கொண்டிருப்பவன் கேட்டு கொண்டிருந்தான். கேட்டு முடிந்தவுடன் விலகி சென்றான். இந்த மாதிரி அவன் எங்கும் பார்த்ததும், கேட்டதும் கிடையாது. பெருமூச்சு விட முயற்சி செய்தான். முடியவில்லை.
***********************************************************
'என் பெயர் கண்ணன். என்ன படிக்கிற??'
அவள் பதில் சொல்லும் முன் கார்த்திக், ராதாவை பார்த்து கேட்டான்.
'என்னம்மா, கிளம்புவோமா??'
'சரிடா.. நானும் கிளம்புறேன். ஒரு நாள் வீட்டுக்கு வா!! கல்லூரியில் பேசியபடி இவங்க ரெண்டு பேருக்கும், கல்யாணம் பண்ணி வச்சிரலாம்.' சிரித்து கொண்டே கார்த்திக் சொன்னான்.
'அதுக்கென்ன?? பண்ணிட்டா போச்சு... ' என்றான் ரகு.

இதை கேட்டவுடன் கண்ணன் வானத்தில் பறக்க ஆரம்பித்தான். ராதாவை பார்ப்பதற்காகவே தினமும், ரகுவுடன் ஜாகிங் வந்தான். பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டனர்.

'ப்ரெண்ட்ஷிப்ல நம்மள மிஞ்சிருவாங்க, போல..' என்று ரகு கார்த்திக்கிடம் சொன்னது கேட்டு, அவர்கள் அழகாய் சிரித்தனர்.

'நாளைக்கு, அன்பர் தினம்... உனக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன். கண்டிப்பாக வாங்கிக்கணும். சரியா??' என்றான் கண்ணன்.

'என்ன கிப்ட்??' என்று விழித்தாள், ராதா.

'சஷ்பென்ஸ்!!' என்றான் கண்ணன்.
**************************************************************************
அவன் ரொம்ப நேரம் நிற்பது போல உணர்ந்தான். ஆனால் கால் வலிக்க வில்லை. தூங்கலாம் என்று கண் மூடினான். தூக்கமும் வர வில்லை. அந்த இருவரை நெருங்க நெருங்க, அவனுக்கு பிடிக்காத ஒன்று இருப்பதை உணர்ந்தான். அதை பார்த்தாலே அவனது யார் பின்னாலாவது ஒளிந்து கொள்வான். இங்கு ஒளிந்து கொள்ள ஒன்றும் இல்லாததால், வேறு பக்கம் தன் பார்வையை திருப்பினான். யாரோ அவனை திருப்பியதால் அது இருக்கும் திசை நோக்கி திரும்பினான். அது அவன் மிக அருகாமையில் இருப்பது கண்டு அலறினான். ஆனால் அந்த அலறல் அவனுக்கே கேட்கவில்லை....
***************************************************************************
'அம்மா! அப்பாவுக்கு உடம்பு சரியில்லையினாலும் பரவாயில்லை, நான் மட்டும் ஜாகிங் போகிறேன்.' என்று அடம் பிடித்தான், கண்ணன்.
'நீ தனியாக போக வேண்டாம்..' என்று அரட்டினாள் அவனது அம்மா.
'நான் என்ன தனியாகவா போகிறேன்?? டிரைவர் கூடத்தானே போகிறேன்.. ப்ளீஷ்மா..' என்று கெஞ்சினான்.
'சரி... சரி... போ...' என்று அவன் அம்மா கூற, உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

ராதாவுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுடன், காத்திருந்தான். அவர்கள் காரின் எண்ணை பார்த்தவுடன் அளப்பரிய ஆனந்தம் கொண்டான். அதிலிருந்து ராதா மட்டும் இறங்கி வருவதை கண்டு பரமானந்தம் அடைந்தான்.
'உன் அப்பா வரவில்லையா??' என்றான், கண்ணன்.
'அவருக்கு உடம்பு சரியில்லை...' என்றாள், சிறு மிரட்சியுடன்.
'இந்தா என் அன்பர் தின பரிசு..' என்று ஒரு டெட்டி பியரை கொடுத்தான்.

அதன் நெஞ்சில் 'I LOVE YOU' என்ற வாசகம் இருந்தது.
'....' அதை பார்த்து மூர்ச்சையானாள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தன் கார் இருக்கும் திசை நோக்கி ஓடினாள்.

இதை சற்றும் எதிர்பாராத கண்ணனின் மூளை, யோசிக்க தொடங்கியது. விஷயம் கார்த்திக்கிடம் செல்லும். கார்த்திக் மூலம் ரகு அறிவான். பெல்ட், அடி ஷ்கேல், கம்பு, என்று பல அடிக்கும் ஆயுதங்கள் அவன் கண் முன்னே தெரிய, கடல் நோக்கி ஓடினான்.

'அவனை பிடிடா... ' என்று யாரோ சொல்ல, ஈனஷ்வரத்தில் கேட்டது.

************************************************************

அவனை அலற வைத்த எருமை மாடு மிக அருகாமையில் நின்றது.. ஒருவன் வந்து அவன் காதை தொட்டு செல்ல, அவர்கள் இருவரும் பேசுவது கேட்க ஆரம்பித்தது.
'பெயர்'
'கண்ணன்'
'விதி'
'முதன் முதலில் யாரிடம் காதலை சொல்கிறானோ, அவர்களுடன் ஆயுள் முழுக்க சேர்ந்து வாழ்வான்.'
'ஆயுள்'
'64'
'மரணத்திற்கு காரணம்.'
'முதன்முதல் அவனுக்கென்று பிறந்த பெண்ணிடம் காதலை சொன்னான். அவள் பதில் சொல்லும் முன், அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டான்.'
'மரணித்த வயது'
'8'

Wednesday, January 9, 2008

ஆண்டு 2008 யிடம் கேட்கிறேன்...

முந்தைய பதிவில், 2007 க்கு ஒரு பிரியா விடை கொடுத்தாச்சு. 2008 க்கு ஒரு வரவேற்பு கொடுக்கவே, இந்த பதிவு...

புதிதாய் பூத்த புத்தாண்டே !

அர்த்தமற்ற பதிவு ஆயிரத்தெட்டு கேட்கவில்லை...
அழகான, அபூர்வமான பதிவு ஒன்று கேட்கிறேன்...

வெடிகுண்டு சத்தமில்லா அமைதி கேட்கவில்லை...
உயிர், உடல், பூமி சேதமில்லா வாணவேடிக்கை கேட்கிறேன்...

நோய் நொடி இல்லா உடல் ஆரோக்கியம் கேட்கவில்லை...
உடல் இளைத்தாலும், உழைக்கும் மன உறுதி கேட்கிறேன்...

அழுது வழியும், வேலை கெடுக்கும் சீரியல் கேட்கவில்லை...
அர்த்தமுள்ள, நினைத்தாலே இனிக்கும், ரசிக்கும்படியான நாடகம் கேட்கிறேன்...

அழகான பெண்கள் மட்டும் கண்ணில் படும்படி கேட்கவில்லை....
அழகானவர்கள் காதலிகளாகவும், அறிவானவர்கள் நண்பர்களாவும் கேட்கிறேன்...

அறிவுரை கூறும், தன்னிலை விளக்கும், திரைப்பட கதாநாயர்கள் கேட்கவில்லை....
சுயமாய் யோசிக்க வைக்கும், கதையுள்ள திரைப்படங்களை கேட்கிறேன்....

எந்த போட்டியிலும் தோற்காத விளையாட்டு அணி கேட்கவில்லை...
ஜெயித்தாலும், தோற்றாலும், மாறாத மக்கள் மனம் கேட்கிறேன்...

கேட்டதையெல்லாம் கொடுக்க இறையருள் கேட்கவில்லை...
கேட்டது கிட்டாவிடினும் புன்னகைக்கும் மனம் கேட்கிறேன்....

Tuesday, January 8, 2008

நானும் 2007ம்

இந்த 2007ம் வருடத்தில், எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பே இந்த பதிவு. இது நான் எனக்காக எழுதும் பதிவு. என்னை கவர்ந்த, பாத்தித்தவைகள் பின்வருமாறு...

சாதனை: முதுநிலை கல்லூரியில் சேர்ந்தது, தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது.

உணர்ந்தது: பிறர் வெறுக்காத அளவுக்கு, நானே ரசிக்கும் அளவுக்கு, எனக்கு எழுத தெரியும் என்று உணர்ந்தேன். இளநிலை கல்லூரி முடிந்தவுடன், எனக்கு படிப்பே வராது என்று நினைத்தது, தவறு என்று உணர்ந்தேன்.

கற்றது: உன் கருத்தை வெளியிடும்போது, பூ மட்டும் வராது, பூகம்பமும் வரும், பின்னூட்டம் வடிவில்.

புதிய நண்பர்கள்: வருண் என்ற அலுவலக கூட்டாளி. முதுநிலை கல்லூரியில் சில நண்பர்கள்.

சென்ற புதிய நாடு: மலேசியா

சென்ற புதிய ஊர்: காளகஷ்தி.

சிறு வருத்தம்: சிலர் தவறாக புரிந்து கொண்டு, மனதை காயப்படுத்தியது.

பெரிய வருத்தம்: ஆருயிர் நண்பன் ஒருவனை இந்த வருடம் முழுவதும் பார்க்கவில்லை. (அதனால்தான், இந்த வருடம் நன்றாக இருந்ததோ?? :-))

ரசித்த புத்தகங்கள்: சிகரத்தை நோக்கி - வைரமுத்து, Eat That Frog - Brian Tracy

ரசித்த திரைப்படம்: மொழி, பொல்லாதவன், பெரியார்.

ரசித்த பாடல்: யோகி-பி யின் மடை திறந்து ரீ-மிக்ஷ் பாடல், வளையல் கரங்களை பார்க்கிறேன்.

உருக வைத்த விஷயம்: கல்லூரி திரைப்படத்தின் முடிவு.

எதிர்கால எதிர்பார்ப்பு: இந்த வருடம் போல் எல்லா வருடமும் இருக்க வேண்டும்.

எதிர்பாராத திருப்பம்: என் அழகியுடன் எனது முதல் திருமணம்.

உருப்படியாக செய்த விஷயம்: பட்ஜெட் போட ஒரு எக்ஷல் ஷீட் தேடி பிடித்தது. அது மற்றவருடன் பகிர்ந்தது.

2008ன் தீர்மானம்: ஒன்றே செய் !!! நன்றே செய் !!! இன்றே செய் !!!

மொத்ததில் ஒரு ரசிகனாக, மாணவனாக, அலுவலகத்தில் நல்ல பொறியாளனாக எனக்கு வெற்றியை மட்டும் அள்ளி தந்த வருடம் 2007. அந்த வருடம் முடிந்ததில் வருத்தம் அதிகம் தான்... இருந்தாலும், "வருங்காலம் வசந்த காலம்... நாளும் மங்களம்..." என்ற நம்பிக்கையுடன்


வருக, 2008ம் ஆண்டே வருக !!!
அனைவருக்கும் நல்லதையே அள்ளித்தருக !!!