Friday, September 21, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 4 (ஆத்மஞானம்)


நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

பிறவிகள்: இறைவனின் ஆணைப்படி நான் பிறப்பெடுக்க வேண்டும். எடுக்கும் பிறவிகளில் சில நிலைகள் உண்டு. முதல் நிலை ஓரறிவு (தொடுணர்வு) படைத்த புல்பூண்டு, மரங்கள். இரண்டாம் நிலை ஈரறிவு (சுவையுணர்வு) கொண்ட நீந்துவன. மூன்றாம் நிலை மூன்றறிவு (நுகர்வுணர்வு) கொண்ட ஊர்வன. நான்காம் நிலை நான்கறிவு (பார்க்கும் திறன்) கொண்ட பறப்பன. ஐந்தாம் நிலை ஐந்தறிவு (செவியுணர்வு) கொண்ட விலங்கினம்.

பல பிறவிகள் எடுத்து ஐந்து நிலைகள் கடந்து எடுக்கும் பிறவி மனிதப்பிறவி. இப்பிறவிகளில் எல்லாம் இயற்கையின் நியதிக்கு உட்ப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம். இயற்கையுடன் இயைந்து வாழ்வதால் ஆனந்தம் மட்டுமே.

நான் எடுக்கும் உடல்களில் ஆதார சக்தியாய் விளங்குபவன் நானே. தன்னிச்சையாய் செய்யப்படும் காரியங்களுக்கு (சுவாசிப்பது, செரிப்பது, இருதயம் துடிப்பது, இரத்தம் ஓடுவது) சக்தி வழங்குவது நானே.

மனிதப்பிறவி: நான் எடுக்கும் பிறவிகளிலே மிகவும் உன்னதமான பிறவி மனிதப்பிறவி ஆகும். ஏனென்றால், இப்பிறப்பின் மூலம் இறைவனை அடையலாம். மனிதப்பிறவி எடுக்கும்பொழுது மட்டும், மனம் (மனஸ்-மனுஷன் - மனிதன்) என்ற ஒரு வஸ்து உருவாகிறது. இதுவே ஆறாம் நிலை என்ற ஆறாம் அறிவு (பகுத்தறிவு) ஆகும்.

மனம்: மனம் என்பது எண்ணக்குவியல். வாயின் மூலம் வலை கட்டி அவ்வலையிலே இருக்கும் சிலந்தி போல மனது. எண்ணத்தை தோற்றுவித்தும், அவ்வாறு தோன்றிய எண்ணங்களில் கிடப்பதும் மனமே.

மனம் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம் மற்றும் சாபம் ஆகும். மனமிருப்பதால் எண்ணமுடியும், எண்ணியதை ஐம்புலன்களினால் அடைய முடியும். அதனால் மனமென்பது வரமாகும். மற்ற உயிரனங்களுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் பகுத்தறிவு.

ஆனால், இந்த மனத்தில் தோன்றும் முதன்மையான எண்ணங்களில் ஒன்று, ‘நான்’ என்ற ஆணவம். ‘நான் ஆத்மா அல்ல, இந்த உடலே நான்’ என்ற எண்ணமே!. இதுவே சாபம்! இந்த ஆணவத்தினால் செய்யப்படும் வினைகளினால் வினைப்பயன் (கர்மா) என்னை தொற்றிக்கொள்கிறது. நிலையாகிய இறைவனையும், ஆத்மாவாகிய என்னையும் மறந்து, இந்த உடலே நிலையானது, உடலால் அனுபவிக்கும் இன்பமே நிலையானது என்ற எண்ணம் வலுக்கிறது. இந்த எண்ணமே மாயை. ஆக தூய ஆன்மாவாகிய நான் மனித உடலெடுத்ததும் ஆணவம், கன்மா, மாயை என்ற மும்மலங்கள் சூழ்கின்றன. இந்த மலங்களை என்னிடம் இருந்து களைய நான் பலப்பல பிறப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.
மனத்தின் இயல்பு கேட்க மட்டுமே தெரியும். என் இயல்பு கொடுக்க மட்டுமே தெரியும். மனம் உலக ஆசையில் ஈடுபட்டு, என்னை மறந்து, ஐம்புலன்களையும் தன் இஷ்டப்படி ஆட்டுவித்து உவகை கொள்ளும். உவகை இல்லாத நிலையில், கவலை கொள்ளும். உவகை அடைந்து முடித்த பின்னர், மற்றொரு ஆசையை தேடி ஓடும். மனதின் ஆசைகளுக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கும் எல்லையில்லை.
ஆத்ம திருப்தி:கொடுக்க மட்டுமே தெரிந்த எனக்கும், கேட்க மட்டுமே தெரிந்த மனதிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் மனிதன் இழப்பது அமைதி/நிம்மதி. ஆத்மா, மனம், உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டால் வாழ்க்கை இனிமையானதாய் இருக்கும். ஆனால் பல மனிதர்களின் வாழ்வில் இம்மூன்றூம் வெவ்வேறு வழியில் பயணப்படுகிறது. ஆகையால்தான், மனித வாழ்வில் பல துயரங்கள், துன்பங்கள்.
உதாரணத்திற்கு, கர்ணனின் கடமை தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை காப்பதும், அவர்கள் கேட்பதை அளிப்பதும். தன்னை எதிர்ப்பவர்கள் தனது தம்பிகள் என்று அறிந்தும், தன்னிடம் தஞ்சம் புகுந்த துரியோதனனை காத்தான். கிருஷ்ணனிடம் புண்ணியத்தின் பலனை தானம் செய்து மோட்சம் அடைந்தான்.
இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு காரண காரியத்திற்காக / கடமை செய்ய இவ்வுலகில் மனித பிறவி எடுக்கின்றன. அது என்ன கடமை என்று அறிய மனிதன் முற்பட வேண்டும். அதை அறிந்து, அந்த கடமையை செய்தால் ஆத்மதிருப்தி கிடைக்கும். மனித வாழ்வும் இனிமையாய், பயனுள்ளதாய், ஆனந்தமயமாய் இருக்கும்.
ஆத்ம ஞானம்: இவ்வுலகில் மனதின் ஆசையை நிறைவேற்றி கொள்ள ஓடும் மனிதர்கள் எல்லோரும் ஆறாம் நிலையில் இருக்கிறார்கள். அப்படி தெறிக்கட்டு ஓடும் மனதை அடக்கி, ‘நான் ஒரு ஆத்மா’ என்று உணர்பவர்கள் ஏழாம் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருந்தவர்கள், மனோநாசம் செய்து, எண்ணங்களற்ற நிலையில் இருந்த இரமணர். ‘ஆசைகளே துன்பத்திற்கு காரணம்’ என்று கூறி ஆசைகளை துறந்து, ஆன்ம நிலையான அன்பின் வடிவமாய் இருந்த புத்தர்.
ஆத்ம திருப்தி அடைந்து, இந்த ஏழாம் நிலையை அடைய வேண்டியதுதான் மனிதப்பிறவி எடுத்த எனது நோக்கம்.

Wednesday, September 5, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 3 (அன்பே சிவம்)


அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்கிறார் திருமூலர். இறைவன் தூய அன்பின் வடிவமாக வீற்றிருக்கிறார். அது எங்ஙகனம் என்று எனக்கு தெரிந்த வரையில் அறிந்து, ஆராய்ந்து, உணர்ந்து எழுதிய பதிவே இது.

அன்பு:

எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பே, தூய அன்பாக (இறைவனாக) கருத தக்கது. பிரதிபலன் எதிர்பார்த்து, பிற்காலத்தில் உதவும் என்ற உள்நோக்கத்தில் செலுத்தும் அன்பானது வியாபாரம் ஆகும். பிற உயிர் தனக்கு தீங்கே செய்தாலும், அந்த உயிருக்கு அன்பு செலுத்தும் உள்ளத்தில் இறைவன் மகிழ்ந்து குடியிருப்பான். இப்பதிவில் நான் கூறும் அன்பு செலுத்துவது எல்லாம் துளியும் சுயநலமில்லாத அன்பாகும்.

அன்பின் வடிவங்கள்:

அன்பு செலுத்துவதற்கு வரைமுறை எதுவும் கிடையாது. உண்மையான அன்பு உள்ளே இருந்தால் அது எந்த வடிவத்திலும், எந்நேரத்திலும் வெளிப்படும். மனமொடிந்து இருப்பவருக்கு சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகள் கூட அன்பின் வடிவம்தான். பசித்த முகம் பார்த்து உணவு கொடுப்பதும், வெற்றி பெற்றவருக்கு முதுகில் கொடுக்கும் செல்லத்தட்டும், தேவையான (அ) அதிமுக்கியமான நேரத்தில் செய்யப்படும் உதவியும், நோயில் வாடுபவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனையும், உலகின் ஏதோ மூலையில் இறக்கும் உயிர்களுக்காக 2-நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதும் தூய அன்பின் சில வடிவங்களாகும். மேலும் பல வடிவங்கள் உண்டு.

அன்பிருக்கும் இடங்கள்:

இந்த பிரபஞ்சத்தின் எழுதப்படாத விதி என்னவென்றால், “அது இருந்தால் இது இருக்காது. இது இருந்தால் அது இருக்காது. ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருக்க வாய்ப்பு இருக்காது.” அதுபோல அன்பு இருக்கும் இடத்தில் சுயநலம் துளியும் இருக்காது. சுயநலம் இருக்கும் இடத்தில் அன்பு துளியும் இருக்காது.

ஏனென்றால் தூய அன்பு ஒரு உள்ளத்திற்கு வந்து விட்டால், அது முதலில் துரத்தும் எதிரி சுயநலமாகும். அது மட்டுமல்ல, தூய அன்பு என்பது அழுக்காறு, அவாவெகுளி, இன்னாசொல் என்ற நான்கும் இல்லாத இதயத்தில் குடிகொள்ளும். சுயநலம் இருந்தால் இந்நான்கும் தானே வந்து குடிகொள்ளும். புரியவில்லையா? இதோ விளக்கம்.

பிற உயிர்களை தன் உயிர் போல நேசிப்பவனுக்கு மற்ற உயிர்களை (அ) மற்ற உயிர்களின் வளர்ச்சி/உடைமை/பொருள் கண்டு பொறாமைப்படும் அவசியம் இருக்காது. தூய அன்பிற்கு கொடுக்கத்தான் தெரியும். தன்னிடம் உள்ள பொருள் பிறருக்கு கொடுப்பதற்கே என்று எண்ணத் தூண்டும்.  ஆகையால் தன்னிடம் இருப்பதுவும் மற்றவர்க்கு சொந்தம் என்று நினைக்கும் மனதிற்கு ஆசை அறவே இருக்காது. தூய அன்பு கொண்ட உள்ளத்திற்கு கோபப்படவும் தெரியாது. கடுஞ்சொல் பேசவும் தெரியாது. எனது நலம் தான் முக்கியம் என்று எண்ணும் சுயநலமிக்க மனிதருக்கு இந்நான்கும் கண்டிப்பாக இருக்கும். பிறர் நலம் தான் முக்கியம் என்று எண்ணும் தூய அன்பு கொண்ட உள்ளத்தில் இந்நான்கும் இருக்காது.

சுயநலம் இருந்தால் அன்பு இருக்காது. அன்பு இருந்தால் சுயநலம் இருக்காது.

இறைவனை தரிசிக்கலாம்:

இறைவனை மிக எளிதில் தரிசிக்கலாம். கண்ணை மூடிக்கொண்டு, வெற்றி பெற்ற தருணங்களை தவிர்த்து, தங்கள் வாழ்வில் நடந்த ஆனந்தமாய்/உள்ளம் உவந்த தருணங்களை நினைத்து பாருங்கள்.

அந்த தருணங்கள் கண்டிப்பாக நீங்கள் தூய அன்பை ஸ்பரிசித்த சமயமாக இருக்கும். அல்லது, நீங்கள் மற்றவரிடம் அன்பு செலுத்திய சமயமாக இருக்கும். மற்றவரிடம் அன்பு செலுத்தும்போது நம்மில் இறைவனை தரிசிக்கலாம். மற்றவர் நம்மீது அன்பு செலுத்தினால் அவர் உருவில் இறைவன் தரிசனம் கிடைக்கும்.

அதனால்தான், தூய அன்பு செலுத்தும் அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வமாக காட்சி அளிக்கிறார்கள். இறைவன் எல்லார் வீட்டிலும் இருக்க இயலாத காரணத்தினால், தனது சுயரூபமான அன்பின் மொத்த வடிவமாக தாயை ஒவ்வொரு வீட்டிலும் படைத்தான்.

பலருக்கு பால்ய பருவம் சுவைமிக்கதாக, ஆனந்தமயமாய் இருக்கும். அதற்கு காரணம் அன்பு / இறைவன் எப்பொழுதும் அருகினிலே இருப்பது. வயது ஏறஏற சுயநலம் ஆட்கொண்டு, அன்பு அகன்று விடுவதால் வாழ்வில் சுவையும், ஆனந்தமும் குறைந்து விடுகிறது.

சுயநலமற்ற அன்பு குடி கொண்ட இதயத்தில், இறைவனை தரிசிக்கலாம். ஆனந்தத்தை உணரலாம்.

பிறப்பின் நோக்கம்:-

நாம் அனைவரும் மனிதராய் பிறந்ததின் உண்மையான/அடிப்படையான நோக்கம், பிற உயிர்களிடத்தில் தூய அன்பு செலுத்துவதற்கே. பெரிய தலைவர்கள், மகான்கள் அனைவரும் வெவ்வேறு இலட்சியத்திற்காக, தமக்கென்று கொள்கைகள் கொண்டு போராடியிருக்கலாம். ஆனால் அவர்களை நெருங்கி, ஆராய்ந்து பார்த்தால், அடிப்படையில் தூய அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களே, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு,

·          இந்துக்களும், முஸ்லீம்களும் என்றும் ஒற்றுமையுடன், ஒருவொருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்று இறுதி மூச்சு வரை போராடியவர் காந்தி. “எதிராளியே ஆனாலும், அவனை இம்சிக்க கூடாது” என்ற அவரின் தூய அன்பின் வெளிப்பாட்டின் காரணமாக அவர் கையில் ஏந்திய ஆயுதம், அஹிம்சை.
·          அகில உலக அளவில் இந்து மதம் பற்றி அறிய வைத்தவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையின் முதல் வாக்கியம், “சகோதர, சகோதரிகளே!”. அடிமனத்தில் ஆழப்பதிந்து இருக்கும் அன்பின் வெளிபாடன்றி இது வேறு என்னவாக இருக்க முடியும்? அது மட்டுமன்றி, கர்ம யோகத்தைப்பற்றி இவர் எளிமையாய் சொல்வது இரண்டே வார்த்தைகள், ”சுயநலமின்றி உழைத்தல்.”
·          ஆறாம் வகுப்பு மட்டும் படித்து படிப்பின் முக்கியத்துவம் அறிந்தவர் கர்மவீரர் காமராஜர். ‘படிக்கும் பாடம் மனதில் பதிய வேண்டுமென்றால், வயிற்றில் உணவு இருக்க வேண்டும். பசியுடனிருந்தால் படிக்கும் பாடம் மூளையில் ஏறாது’ என்று உணர்ந்து மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மனதில் இத்தகைய திட்டம் உருவெடுக்க, தாயன்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்!
·          “கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுள் ஒரு கல்” என்று பெரியார் முரசு கொட்ட முக்கிய காரணம், சாதி. கடவுள் பெயர் சொல்லி சாதிப்பிளவு ஏற்பட்டது. சாதிப்பிளவினால் மேல் சாதியினர், கீழ்சாதியினரை அடிமைப்படுத்தியதை கண்டு பொங்கி எழ காரணமாயிருந்தது அவர் உள்ளிருந்த தூய அன்பே!
·          “வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் பாட காரணம், பயிரையும் தன்னுயிராக கருத வைத்த தூய அன்பே ஆகும்.
·          எல்லா மதங்களின் சாரத்தை பார்த்தாலும், “பிறர் உயிர்களிடத்தே அன்பு செலுத்து” என்றே தெரிய வருகிறது.

யுகங்களில் அன்பு:

முதல் யுகமான கிருத யுகத்தில் அன்பே பிரதானமாக இருந்த காரணத்தினால், சத்தியத்தால் நான்கு கால் பாய்ச்சலுடன் செல்ல முடிந்தது.

இரண்டாம் யுகமான, திரேதா யுகத்தில் பொறாமை நுழைந்து சத்தியத்தின் ஒரு காலை உடைத்தது. சுயநலம் தனது ஒரு காலை அடியெடுத்து வைத்தது. அதனால், சுயநலத்தின் காரணமாய் கைகேயி “பரதன் நாடாள வேண்டும். இராமன் காடேற வேண்டும்” வரம் கேட்டாள். தனது கணவனை இழந்தாள். இராவணனும், தனது சுகமே பிரதானம் என்று கருதி சீதையை கவர்ந்து சென்றான். சுயநலத்தின் காரணமாய், அறிவுரை கூறிய அன்புத்தம்பியை விரட்டினான். மற்றொரு தம்பியை இழந்து, மகனை இழந்து, அனைத்தும் இழந்து தன் இன்னுயிரையும் இழந்தான்!
மூன்றாம் யுகமான, துவாபரயுகத்தில் பொறாமை சத்தியத்தின் இன்னொரு காலையும் உடைத்தது. ஒரே குடும்பத்தினுள்ளே பொறாமை புகுந்து, சுயநலம் இரண்டு கால்களுடன் நின்றது. “ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன்.” என்று துரியோதனனை கூற வைத்தது, சுயநலமில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தம்பிகள், நண்பன், உறவினர்கள் இழந்து தனிமையில் தன் இன்னுயிரையும் இழந்தான்.
நான்காம் யுகமான, துன்ப யுகமான கலியுகத்தில், தூய அன்பும் சத்தியமும் ஒற்றைக்காலுடன் நொண்டியடிக்கின்றன. சுயநலம், பொறாமை, பேராசை, கோபம், இன்னாச்சொல் ஆகியன மூன்று காலுடன், முக்காலியில் அமர்ந்தது போல தீர்க்கமாய் உட்கார்ந்து உள்ளன. அதனால், கணவன் – மனைவிக்கிடையே, உடன்பிறந்த சகோதரர்க்கு இடையே, (சில குடும்பங்களில்) பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் இடையே, நண்பர்களுக்கிடையே அன்பு குறைந்து, சுயநலம் மேலோங்கியுள்ளது.

சுயநலத்தினால், இராவணன், துரியோதனன் அழிந்தது அறிவோம். அப்பாதை விடுத்து, பிறரிடத்தில் தூய அன்பு செலுத்துவோம். ஆனந்தமாய் வாழ்வோம். 

Thursday, May 24, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 2 (பாவ புண்ணியம்)

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?"

என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.

மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.

ஜோதிடப்படி பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களை நிறைவேறா ஆசைகளை அனுபவிக்கவே நாம்/நமது ஆன்மா பிறவி எடுக்கிறது. ஜோதிடத்தில் தசா-புத்தி என்ற காலக்கணக்கு உள்ளது. நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்தி நடந்தால் நமக்கு நல்ல நேரம் என்று கொள்ளவேண்டும். அந்த நல்ல நேரத்தில், முன் ஜென்மத்தில் நாம் யார்க்கெல்லாம் நன்மை செய்தோமோ அவர்கள் நமக்கு இந்த ஜென்மத்தில் நன்மை செய்து விட்டுபோவர். உண்மையில் நல்ல நேரம் என்பது நமது முன் ஜென்ம புண்ணியங்களை அனுபவிக்கும் நேரம்.

அதேபோல துஷ்டஷ்தான அதிபதிகளின் தசா/புத்தி என்பது கெட்ட நேரம் ஆகும். அப்பொழுது பூர்வஜென்மத்தில் நாம் யாருக்கெல்லாம் தீங்கு செய்தோமோ அவர்கள் இந்த ஜென்மத்தில் நம்மை வாட்டிவதைத்து சென்று விடுவர். பூர்வ ஜென்மத்தில் ஏமாற்றி இருந்தோம் எனறால், இந்த ஜென்மத்தில் ஏமாற்றப்படுவோம். துரோகம் செய்து இருந்தால் நமக்கு துரோகம் இழைக்கப்படும். வினை விதைத்திருந்தால் வினை அறுப்போம். தினை விதைத்திருந்தால் தினை அறுப்போம். பொதுவாக நாம் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் நேரமே கெட்ட நேரம் ஆகும். கெட்ட நேரத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நமது பாவத்தின் அளவு குறையும்.

இதுவே இந்த கர்மபூமியின் எழுதப்படாத நியதி. கெட்ட நேரமும், நல்ல நேரமும் மாறி மாறி வரும். வெற்றியை மட்டும் ருசித்து வாழ்ந்தவனும் இல்லை. தோல்வியை மட்டும் ருசித்து இறந்தவனும் இல்லை. வெற்றியும்,தோல்வியும், நல்ல நேரமும், கெட்ட நேரமும் மாறி மாறி வரும்.

பூர்வஜென்ம கர்மாப்படி தான் (புண்ணியம்/பாவம்) இந்த வாழ்க்கை என்றால், இந்த ஜென்ம கர்மாப்படிதான் நமது அடுத்த வாழ்க்கையும் அமையும் என்பது தெளிவாகும்.நேற்று நான் செய்த செயலுக்கு, இன்றைய நிலைமை என்றால், இன்றைய எனது செயல் நாளைய எனது நிலைமையை தீர்மானிக்கும். இதைத்தான் திருமூலர் "தானே தமக்கு தலைவனும் ஆமே" என்றார். 'பாட்ஷா' படத்தில் ரஜினியும் 'உன் வாழ்க்கை உன் கையில்' என்றார்.

பூர்வஜென்ம கர்மாவின்படி நமது இந்த வாழ்க்கை எப்படியும் இருந்துவிட்டு போகிறது. இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியத்தில் நமது அடுத்த ஜென்மம் நன்றாக இருக்கும் என்பது உறுதி. இறைவனின் கருணை இருந்தால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் புண்ணியம், பூர்வஜென்ம கர்மாக்களை அடியோடு போக்கிவிடும். ஆக மொத்தத்தில் எத்தகைய துன்பத்தை நாம் அனுபவித்தாலும், இன்றிலிருந்து நாம் புண்ணிய வழியில் பயணப்பட்டால் நமக்கு இந்த/அடுத்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாய் அமையும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட புண்ணிய வழியில் பயணம் கொள்வது எப்படி?

‘'பாவம் என்ற கல்லறைக்கு பல வழி. என்றும் தர்மதேவன் கோயிலுக்கு ஒரு வழி' என்று அழகான வரி எழுதியுள்ளார் புலவர் புலமைப்பித்தன்.

முன்பே கூறியது போல புண்ணியவழி என்பது பிற உயிரினங்களுக்கு மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் நன்மை செய்வது. அப்படிப்பட்ட புண்ணிய வழி நம்மை இறைவனின் அருகில் அழைத்து செல்லும். ஆனால் அத்தகைய வழி கடந்து செல்ல மிகவும் கடுமையானது. கல்லும், முள்ளும், தீய விலங்குகளும் நிறைந்த செங்குத்தான மலையில் ஏறிச்செல்லுவது போன்ற கடினமான பயணம் ஆகும். இதை சுட்டிக்காட்டவே முருகன் குன்றின் மேல் இருக்கிறான். ஐய்யப்பன் சபரிமலையில் வீற்றிருக்கிறான். சிவனும் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும், இமயமலையிலும் தவம் செய்கிறார். அவ்வளவு எளிதான பயணம் அல்ல, புண்ணிய வழி பயணம். ஆனால் இதில் ஓரே ஒரு நன்மை உண்டு.

புண்ணிய வழியில் பயணம் செய்தால் கல் குத்தும் (ஏளனங்கள் இருக்கும்), முள் குத்தும் (அவமானங்கள் ஏற்படும்), தீய விலங்குகள் அச்சுறுத்தும் (கொடும்பாவிகள் மிரட்டுவார்கள்). ஆனால் இந்த புண்ணிய வழியில் செல்பவர்களுக்கு இறைவன் துணையிருப்பான். 'என்ன நடந்தாலும் சரி, இந்த வழியை விட்டு விலகமாட்டேன்' என்று உறுதியோடு அவனை நோக்கி செல்பவர்களை அவன் எந்நேரமும் பற்றிக்கொண்டு இருப்பான். கல்லையும், முள்ளையும், தீய விலங்குகளையும் இறைவன் பார்த்துக்கொள்வான். அவன் அரவணைப்பில் கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தையாகும். தீய விலங்குகள் தெறித்து ஓடும்.

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டான்.' அதுபோல இறைவன் நாம் அந்த புண்ணிய வழியில் செல்லும்போது வேதனைகளையும், இன்னல்களையும், இடர்களையும் கொடுத்து, 'புண்ணிய வழியில் இருந்து விலகுகிறோமா' என்று சோதிப்பான். சோதித்து பார்த்த பின்னரே தன் அருகாமையில் சேர்த்து கொள்வான்.

சரி. பாவ வழி எப்படி இருக்கும் என்பதையும் காண்போம். அது ECR ரோடில் பைக்கில் ஹாயாக செல்வது போன்றது ஆகும். சொகுசாக இருக்கும் பயணம். எப்பொழுது விபத்துக்குள்ளாவோம் என்று தெரியாது. அது இறைவனை நோக்கிய பயணம் இல்லாத காரணத்தினால் அவனும் துணைக்கு வரமாட்டான். பெட்ரோல் தீர்ந்து விட்டாலோ, விபத்து நடந்தாலோ யாரும் துணைக்கு வர மாட்டார்கள். இறைவனே துணைக்கு வராதபோது வேறு யார் வருவார்?

இதைத்தான் 'பாட்ஷா' படத்தில் ரஜினி சொல்வார், 'ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான். ஆனால் கைவிட்டுவிடுவான்.' எம்.ஜி.ஆரும் ஒரு படத்தில் சொல்வார், 'நல்லதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கடைசி வரைக்கும் நம் கூடவே இருப்பர். கெட்டதுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஒரு ஆபத்து என்றவுடன் பட்டமா பறந்து விடுவார்கள்.'

மொத்தத்தில், இறைவன் இந்த அழகிய உலகை படைத்துவிட்டு, பல ஆன்மாக்களை உலவ விட்டார். அவனை அடைய ஒரே ஒரு புண்ணிய வழியை மட்டும் உருவாக்கினார். கடுமையான, கடினமான வழி அது, ஆனால் அவ்வழியில் அவரே வழிகாட்டியும், துணையுமாவார். பாவ வழிகள் பலவற்றை மனிதன் உருவாக்கி இருக்கிறான். அது எளிமையானது, ஆனால் அபாயகரமானது.

எவ்வழியில் பயணப்படப்போகிறோம் என்பது நம் கையில்!!!

Tuesday, February 21, 2012

நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 1 (ஏன் பல கடவுள்கள்?)

இந்து மதத்தில் மட்டும் பல கடவுள்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இத்தனை கடவுள்கள் தேவையா என்று என்னுள் எழுந்த கேள்வியின் பதிலே இந்த பதிவு.

நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.

விநாயகர்: முழுமுதற்கடவுள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னர் வழிபட வேண்டியவர். எந்தவொரு காரியத்தையும் இறை நம்பிக்கையுடனும், இறை அனுமதியுடனும் செய்ய வேண்டும் என்பது இவர் கூறும் நெறி. மற்றொன்று, ஜீவகாருண்யம். இவரது தலை யானையின் தலை, வாகனம் எலி, இடுப்பில் இருப்பது நாகம். ஆக எல்லா உயிர்களிலும் யான் இருக்கிறேன்,ஆக எல்லா உயிர்களிலும் என்னைக் காண்,அன்பு செலுத்து என்பது இவர் கூறும் நெறி.

ஈசன்: சுடலையில் இருப்பவர். பற்றற்ற நிலை, இவர் கூறும் நெறி. இரு மகன்கள், இரு மனைவியர் கொண்ட இந்த இல்லறத்தான் இருப்பதோ சுடலை. இவரது ஆடை புலியின் தோல், ஆபரணம் நாகம். பற்று விடுத்து பரமானந்த நிலையில் நாட்டியம் புரிபவர். இல்லறத்தில் இருந்தும் பற்றற்று இருந்து இறைவனை அடையும் நெறி இவர் கூறும் நெறி.

முருகன்: அழகன். தமிழ்க்கடவுள். வேலுடன் இவர் கூறும் நெறி அறிவுள்ள வாழ்க்கை. வேலுடன் இருந்தால் இராஜ அலங்காரத்தில் இருப்பார். வேலில்லை என்றால் தண்டுடன் ஆண்டி கோலத்தில் இருப்பார். இவரது வேல் கூர்மையாகவும், நீளமாகவும், அகலாமகவும் இருக்கும். அறிவும் அப்படியே இருக்க வேண்டும். கூர்மையான அறிவு, ஆழ்ந்து கற்றுணர்ந்த அறிவு, பல துறைகளை கற்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

இராமன்: ஏக பத்தினி விரதன். ஒரு மனிதன் பல பாத்திரங்களில் வாழ வேண்டும். முடிந்த வரையில் எல்லாரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும். நல்ல மகனாக, தாய்-தந்தை பேச்சு கேட்டு வனம் சென்றார். நல்ல அண்ணனாக தம்பி மூவரையும் நல்வழிபடுத்தினார். நல்ல கணவனாக சீதையை இலங்கையில் இருந்து மீட்டு வந்தார். நல்ல நண்பனாக வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு அரசுரிமையை வாங்கி தந்தார். நல்ல தலைவனாக இருந்து அனுமனுக்கு நல்வழி காட்டினார். நம்பி வந்த விபீஷணனுக்கு அடைக்கலம் தந்து அரசுரிமை தந்தார். நம்பி இருந்த சபரிக்கு மோட்சம் தந்தார். தன்மேல் குற்றச்சாட்டு இருந்தாலும்/விழுந்தாலும் இயன்றவரையில் நற்பெயர் எடுக்க வேண்டும் எனபது இவர் கூறும் நெறி.

அனுமன்: நாகத்தை பயத்தினால் கும்பிடுவோம். ஆனையை ஆசையால் ஆசிர்வாதம் வாங்குவோம். இந்த குரக்குசீயத்தை எதற்கு வழிபடுகிறோம்? மனம் ஒரு குரங்கு. அந்த குரங்கை(மனத்தை) அடக்கிய் அனுமன் இவர். தன் வாழ்க்கை மற்றவர்க்கு உதவுவதற்கே, என்பது இவர் கூறும் நெறி. சீதை தற்கொலை செய்ய ஆயத்தம் ஆகும் வேளையில், இராம கானம் பாடி சீதையை காப்பாற்றியவர். 'கண்டேன் சீதையை' என்று கூறி இராமனுக்கு நம்பிக்கை விதைத்தவர். சஞ்சீவி மூலிகை கொண்டு வந்து கொடுத்து இலட்சுமணனை உயிர் பிழைக்க வைத்தவர். 'இராமன் வருகிறான்' என்று கூறி பரதனின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியவர். விபீஷணனை பற்றி உயர்வாக கூறி இராமனிடம் அடைக்கலம் புகுத்தியவர். இலங்கை சென்று இராவணனுக்கு நற்புத்தி கூறியவர். யுகம் யுகமாய் மற்றவருக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் கடமையாய் கொண்டு இருக்கும் இவர் கூறும் நெறி - உதவுங்கள்.

துர்க்கை: ஈசனின் இடப்பக்கத்தில் வீற்றிருப்பவள். எருமையின் தலையின் மேல் ஏறி இருப்பவள். எருமை சோம்பேறித்தனத்தை, அசமந்தை குறிப்பது. அதை அடக்கி செயல் வீராங்கணையாக வீற்றிருப்பவள். பற்றற்ற ஈசன்மேல் பற்று கொண்டவள். இறைவனை கணவனாக கொண்ட இவள், கணவனை இறைவனாக கருத வேண்டும் என்பது இவள் கூறும் நெறி. உலகை செயல் புயலாக இருந்து ரக்ஷித்து காக்கும் இவள், ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்தை காக்க வேண்டும் என்பது இவள் கூறும் நெறி.

நரசிம்மர்: பக்த பிரகலாதனை காக்க அரக்கன் இரணிய கசிபுவை அழிக்க நாராயணன் எடுத்த அவதாரம். நல்லவர்களை காக்க வேண்டும், கெட்டவர்களை அழிக்க வேண்டும் என்பது இவர் கூறும் நெறி.

கிருஷ்ணர்/நாராயணன்: தாமரை இலையில் நீர் போன்ற நிலை, இவர்கள் கூறும் நெறி. உலக சுக-போகத்தில் இவர்கள் இருப்பார்கள், ஆனால் இவர்கள் மனம் அதில் லயிக்காது. தாமரை இலை தண்ணீரில் இருந்தாலும் தண்ணீர் தாமரை இலையில் தங்காது. அது போல, இவர்கள் சுக-போகத்தில் இருந்தாலும் வெறும் சாட்சியாக மட்டுமே இருப்பர். திருமகளின் கடைக்கண்ணின் பார்வைகாக ஏங்குபவர்கள் பலர் உளர். அப்படிப்பட்ட திருமகள் திருவடியில் இருந்தும், அதை கண்டு கொள்ளாமல் ஆனந்த சயனத்தில் (உறக்கத்தில்) இருப்பவர் நாராயணன். மகாபாரதப்போர் நடந்த போது, அதில் (நேரடியாக) பங்கு கொள்ளாமல் வெறும் சாட்சியாக (தேரோட்டியாக) கண்டவர் கிருஷ்ணன். முற்றும் துறந்தவன் ஈசன். மனதளவில் துறந்தவன் நாராயணன்/கிருஷ்ணன்.

ஐந்து விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டவர். அவர்கள் இயல்புக்கு,எண்ணத்திற்கு,தகுதிக்கு,நிலைக்கு தகுந்த வாழ்க்கை நெறியை தேர்ந்தெடுத்து வாழலாம். இறைவனை வழிபடலாம் (அவன் கூறும் வழியில் பயணப்படலாம்). இப்படி பலதரப்பட்ட மக்களை நல்வழிப்படுத்தவே, இத்தனை கடவுள்கள் உள்ளனர். உங்கள் சுயதர்மத்திற்க்கு ஒத்து வரும் தெய்வத்தை தேர்ந்தெடுத்து வழிபடுங்கள், அவ்விறைவன் கூறும் வழியில் பயணப்படுங்கள், வெல்லுங்கள்.