எனது நண்பர்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒருவரை பற்றி கூறி மற்றவரை மறந்து விட்டால் தவறு என்பதால், என்னை பாதித்த நண்பர்கள் பற்றி எழுத உள்ளேன். ஒரு குழந்தை சிரிக்கும் பொழுது யாரையும் தேடாது. ஆனால் அதே குழந்தை அழும் பொழுது அதன் தாயை தவிர வேறு எதையும் தேடாது. அது போல், நானும் யாருடனும் இருந்தாலும் சிரிப்பேன். அதே நேரம், அழ வேண்டுமென்றால், இவர்களின் தோளை மட்டுமே தேடுவேன். தோள் கொடுக்கும் தோழர்கள் அல்லவா???
'உன் நண்பர்களை காட்டு. உன்னை பற்றி சொல்கிறேன். ' - என்பது பழமொழி. இவர்களை காட்டுகிறேன், என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முதலாமவன். இவன் பெயரும் எனது பெயரும் ஒன்றே. எனது உயிர் எடுக்க, கொடுக்க வந்தவன். எனது கல்லூரி நண்பன். எட்டு வருட பழக்கம். நாங்கள் பார்த்துக்கொள்ளாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனது எண்ணமும், இவனது எண்ணமும் முற்றிலும் மாறுபட்டது. ஆனாலும், எங்கள் இருவருக்கும் நட்பு இருப்பதற்க்கு காரணம், நாங்கள் இருவரும் சிறு வயதிலேயே பெரிய துக்கத்தை அனுபவித்தவர்கள். என் மனதில் என்ன நினைக்கிறேன், என்பதை அச்சு அசலாக கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவன். உன்னை இழக்கிறேன், நண்பா !!!
இரண்டாமவன். இவன் ஒரு மருத்துவன். என்னையும் ஒரு பெண்ணையும் சேர்த்து முதன்முதலில் ஒட்டியவன். தற்சமயம் திருமணம் முடிந்து விட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் தொடங்கிய இவனது காதல் இப்பொழுது திருமணத்தில் முடிந்தது. மூன்று வருடங்கள், இரவில் இவனுடன் சேர்ந்துதான் பள்ளியில் இருந்து வீடு திரும்புவோம். கேலி செய்யாத ஆசிரியர் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை.
மூன்றாமவன். தற்சமயம், முனைவர் பட்டத்துக்கு படித்து கொண்டிருக்கிறான். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எனது 'மனசாட்சி'. ஆகையால், இவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைதான். நான் இவனிடம் தொலைபேசியில் பேசும் கடைசி வார்த்தை, 'நான் இனி உன்னை அழைக்க மாட்டேன்.' இரண்டு நாள் கழித்து மறுபடியும் பேசுவோம். சண்டை தொடரும். எனது மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதையே இவனும் சொல்வதால், இவனை ரசிப்பேன். நாங்கள் கடவுள் முதல் காமம் வரை விவாதிப்போம். நாங்கள் ஒன்றை பற்றி விவாதிக்கவில்லை என்றால், அது ஒன்று உலகில் இல்லை, அல்லது, எங்களுக்கு அதை பற்றி தெரியவில்லை என்று அர்த்தம்.
நான்கமவன். நெல்லியாண்டவர் பெயர் கொண்டவன். இவனுடன் ஒன்றாக தங்கியுள்ளேன். ஒன்றாக வேலை பார்த்துள்ளேன். இவனிடம், எனக்கு பிடித்தது இவனுடைய பிடிவாதம். என்னை விட பிடிவாதக்காரன். அதே நேரம் கற்றுக்கொள்ளும் ஆசை கொண்டவன். எந்த ஒரு புதிய விஷயமாக இருந்தாலும், மிக விரைவில் கற்றுகொள்வான். இவனுடைய போரட்ட குணம், என்னை மிகவும் கவர்ந்தது.
ஐந்தாமவன். திருவாளர் சோம்பேறி. அழகானவன். அறிவானவன். நான் சின்னவன் என்றால், இவன் பெரியவன். என்னை விட ஒரு வயது மூத்தவன். இவனுக்கு, நேரம், காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. ஆகவே, இவனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. எனக்காக எதையும் செய்யக்கூடிய நல்ல நண்பன். தற்சமயம், காதல் வலையில் சிக்கிக்கொண்டு வாழ்வை ரசிக்கிறான். இவன் இருந்தாலும் இம்சை, இல்லையென்றால், மகா கொடுமை. இன்னமும் என்னை இம்சைக்க, இங்கு வருகிறான். கடவுள்தான் என்னை இர்ட்சிக்க வேண்டும்.
என் நண்பர்களை பற்றி ஏன் எழுதுகிறேன் என்றால், இப்பொழுது யாரும் என் அருகில் இல்லை. இதில் எழுதினால், அவர்களின் இனிய ஞாபகம் என் மனதை இனிக்க வைக்கும் என்பதால்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Mahesh!! Nice writing da! A good description about your friends.
MACHI A very good impression about ur friends daa.
Post a Comment