Saturday, October 27, 2007

நான் + ஆத்திகன் = நாத்திகன்.

"இறைவன் இருக்கிறாரா?", பற்பல வருடங்களாக நடந்து வரும் ஒரு பெரிய கருத்து மோதலின் சிறு பகுதி என்று இதை கொள்ளலாம். இந்த கட்டுரையின் நோக்கம் தீர்வல்ல. தீர்வை நோக்கிய ஒரு பயணம். இதில் பயணப்பட விரும்புவர் மட்டும் தொடரவும். மற்றவர் இந்த இடத்திலே பிரிந்து கொள்ளலாம்.

இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

நான் ஆத்திகனா, நாத்திகனா என்பது எனக்கு தெரியாது. ஆகையால் அதை எனது மனமும், அறிவும் சொல்லட்டும் என விலகிவிட்டேன்.

மனம் ஆரம்பித்தது, "நான் ஒரு ஆத்திகன். என் பாட்டியார் வாழ்வில் கோயில் செல்லாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். என் தாயார் வீட்டில் செலவிடும் நேரத்தை விட கோயிலில் செலவிடும் நேரமே அதிகம். இவர்கள் வளர்த்த பிள்ளை நான். தெய்வ நம்பிக்கை உடையவன். ஆகையால் நான் ஒரு ஆத்திகன்."

அறிவு எதிர்த்தது, "நான் ஒரு நாத்திகன். என் தந்தையார் பெரியார் வழி செல்பவர். பகுத்தறிந்து செயல்படு, என்பதே எனக்கு சொல்லிகொடுக்கப்பட்ட மந்திரம். என் தாத்தா ஒரு நாத்திகர். கடவுள் இல்லை என்று சொல்பவர். இவர்களை பார்த்து வளர்ந்த நான் மட்டும் எப்படி ஆத்திகன் ஆக முடியும்? தெய்வ நம்பிக்கை கொண்டவன் என்று சொல்லும் மனமே, கடவுளை கண்டு இருக்கிறாயா??"

"இல்லை. நான் கேட்கிறேன். கரண்ட், காற்று இந்த பூமியில் உண்டா??"

"உண்டு."

"கண்டு இருக்கிறாயா?? "

"இல்லை. ஆனால் உணர்ந்து இருக்கிறேன்."

"நானும் கடவுளை உணர்ந்து இருக்கிறேன். அதுவும் பிறந்த சில நிமிடங்களில்.... "

"எப்படி??? எப்படி???"

"பிறந்த சில நிமிடங்கள் நான் சுவாசிக்கவில்லை. இறந்து விட்டேன், என்று முடிவு செய்து விட்டனர். அந்நேரத்தில் அங்கு வந்த என் பெரிய பாட்டி என்னை வேட்டியில் போட்டு உருட்டி மூச்சு விட வைத்தார். அதற்காக என் பாட்டியை தெய்வம் என்று சொல்ல வில்லை. அவரை அங்கு வர வைத்தது தெய்வ செயல். அன்று அந்த இடத்தில் என் பாட்டி வரவில்லையென்றால், நானும் இல்லை. இந்த கட்டுரையும் இல்லை."

"இதில் எங்கு தெய்வ செயல் இருக்கு? நீ பிறந்த ஆஷ்பத்திரியின் பக்கத்தில் உன் பாட்டி வீடு. இரண்டு நிமிடத்தில் வந்து விடலாம். உன் பாட்டியை அங்கு வர வைத்த கடவுள், உனக்கு பிறந்த உடனே மூச்சை கொடுத்து இருக்கலாமே.... சில நிமிடங்கள் தாமதம் செய்வதால், அவர் என்ன செய்ய போகிறார்??"

"என் விதி பத்து நிமிடங்கள் கழித்து தொடங்கி இருக்கலாம். நான் முந்திரிக்கொட்டை போல, வெளி உலகை பார்க்கும் ஆர்வத்தில் பத்து நிமிடம் முன்னமே வந்து இருப்பேன். கடவுள் வெயிட்டிங் லிஷ்டில் போட்டு இருப்பார்."

"அதைத்தான் நானும் சொல்கிறேன். உன் வாழ்வில் நடப்பதற்கு காரணம், உன் செயலும், உன்னை சுற்றி உள்ளவர்களின் தாக்கமும்தான். அது சரி, கடவுள் எப்படி தோன்றினார்?"

"அவர் ஒரு சக்தி. தானாக தோன்றியவர். அவர் ஒரு சுயம்பு. தானாக தோன்றிய பின்னர், இந்த பிரபஞ்சத்தை படைத்தார். இந்த உலகத்தை படைத்தார். இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறார்."

"கடவுள் தானாக தோன்றியது போல், இந்த உலகமும் தானாக தோன்றி இருக்க கூடாதா?? அப்படி எங்கும் நிறைந்து இருக்கும் அந்த சக்தியை ஏன், கோயிலில் மட்டும் வணங்குகிறீர்கள்??"

"காற்று கூடத்தான் எங்கும் நிறைந்து இருக்கிறது. அதை ஏன் டயரில் அடைத்து வைக்கிறீர்கள்??"

"அப்படி அடைத்து வைத்தால்தான் அது டயர். இல்லையென்றால், அது ஒன்றுக்கும் உபயோகப்படாது."

"அது போலத்தான், இதுவும். எங்கும் நிறைந்து இருக்கும் அந்த பரமசக்தியை கோயிலில் சாமியின் சிலையில் ஏற்றி வைக்கிறார்கள். ஒன்றாய் குவியும் சூரிய ஒளி எப்படி தாளை பற்ற வைக்கிறதோ, ஒன்றாய் குவியும் சக்தி பக்தர்களை பரவசப்படுத்துகிறது. கடவுள் இருக்கிறார் என்பதை எந்த காரணத்தை வன்மையாக எதிர்க்கிறாய்?"

"முதல் காரணம், உன்னால் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு ஒரு காரணகர்த்தாதான் கடவுள். தேவையில்லாத பயத்தை போக்க உனக்கு ஒரு நாயகன் வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டவரே கடவுள்."

"புரியவில்லை."

"பிரபஞ்சத்தில் எங்கும் வெற்றிடமாக இருக்க, பூமியில் மட்டும் மனிதன் வாழ நீர், காற்று, எப்படி கிடைத்தது?? என்ற கேள்விக்கு பதில் கடவுள் என்பாய். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், மனிதர்களால் காப்பாற்ற முடியாத நிலைமையில் இருக்கும் உன் பயத்தை போக்க யாரை வேண்டுவாய்?? என்ற கேள்விக்கும், கடவுள் என்பாய். சரிதானே??"

"கண்டிப்பாக !!! நீ என்ன பதில் சொல்வாய்??"

"சொல்கிறேன். குழம்பாதே. இந்த பிரபஞ்சம் தானாக தோன்றியது. அதில் உள்ள பொருள்களின் நிலை இரண்டை பொறுத்து மாறும். ஒன்று அதின் பழைய நிலை. மற்றொன்று, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருள்கள் அதன் மேல் ஏற்படுத்தும் தாக்கம். தற்சமயம், கல்லூரியில் பயன்படுத்தப்படும், ரிலேட்டிவ் கிரேடிங் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மாணவன் ஐந்தாம் நிலையில் படிக்கிறான். ஆறாம் நிலைக்கு செல்ல வேண்டும். அந்த நிலை மாற்றத்திற்கு இரண்டு காரணம், ஒன்று அவனின் உழைப்பு, மற்றொன்று அவனுடன் படிக்கும் மாணவர்களின் உழைப்பு. புரிகிறதா??"

"புரிகிறது. மற்ற மாணவர்களை விட நன்றாக படித்து இருந்தால், இவன் முதலிடம், இல்லையென்றால் கடைசி இடம். ஆனால் நீ அந்த இரண்டு கேள்விக்கு பதில் சொல்லவில்லையே??"

"இதை புரிந்து கொண்டால், நீயே பதில் சொல்லலாம். பூமிக்கு நீர், காற்று வர காரணம் அதை சுற்றி உள்ள ஒன்பது கோள்கள், மற்றும், சூரியன். கண்சிமிட்டும் நேரத்தில் இந்த மாற்றம் ஏற்படவில்லையே. இந்த மாற்றம் நடக்க பல கோடி வருடங்கள் ஆனது. கோள்கள் வேறு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் வேறு ஏதாவது நடந்து இருக்கலாம்."

"இரண்டாவது கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். என் வாழ்க்கை என் கையில் மட்டும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள மற்றவை கைகளிலும் உள்ளது. செல்வ் ஷேவிங் செய்யும் போது என் கையில் இருக்கும் என் உயிர் (அ) வாழ்க்கை, பார்பர் ஷேவ் செய்யும்போது அவன் கையில் உள்ளது. ஆகையால், பயம் கொள்ள தேவையில்லை. அந்த மாணவன் போல் என் கடமையை சரியாக செய்தால் போதும் என்கிறாய்."

"சரியாக சொன்னாய். என் வாதத்தை ஏற்று கொள்கிறாயா??"

"ஏற்று கொள்கிறேன். ஆனால் இரண்டு கேள்விகள். ஒன்று, இந்த கலவையின் ரேஷியோ என்ன?? அதாவது, எனது வாழ்வில், எனது தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? பிரபஞ்சத்தின் தாக்கத்திற்கு எவ்வளவு பங்கு? மற்றொன்று, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்??"

"ம்ம்ம்.... இப்பொழுது மாட்டிகொண்டேன். இரண்டிற்கும் ஒரே பதில்தான். அந்த கலவையின் ரேஷியோ என்பது விதி (அ) கோட்பாடு. அந்த கோட்பாடை உருவாக்கியவன் தான் பிரபஞ்சத்தை படைத்தவன். இப்படி கூட சொல்லலாம். அந்த கோட்பாடின் மூலம் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கலாம். மொழியை படைத்தவன் யார் என்று கேட்டால், நான் என்ன பதில் சொல்வது??"

"கேள்விக்கு எதிர் கேள்வி பதிலாகாது. நான் பதில் சொல்லட்டா??"

"ம்ம்ம்... சொல்லு பார்க்கலாம்."

"நான் அதை கடவுள் என்கிறேன். உன்னிடம் இரண்டு அஷம்ப்ஷன்ஷ் இருக்கு, அதை கடவுள் என்கிறேன். உனது உதாரணத்தையே திரும்ப சொல்கிறேன். மாணவன் படித்து, பரீட்சை எழுதும் வரை அது அவனது செயல். அவனது படிப்புக்கு ஏற்ற மதிப்பெண் கொடுப்பது கடவுளின் செயல். என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை கடவுள் என்று நீ சொன்னாய். உன்னால் கண்டு பிடிக்க முடியாததை நான் 'கடவுள்' என்கிறேன். வருத்தமா??"

"இல்லை. ஏற்றுகொள்கிறேன்."

"ஆக, நாத்திகனாகிய நீ, பிரபஞ்சத்தில் உள்ள சக்தியின் தொடர்ச்சி நீ என உணர்ந்தால், உனது செயல், கடவுள் செயலின் ஒரு பகுதி என உணர்வாய்."

"விளங்கவில்லை."

"'நான்' என்ற அகங்காரத்தை (அ) எனது செயலின் தாக்கத்தை, ஒழித்து பார்த்தால் மிஞ்சி இருப்பது கடவுளின் செயல். அது தான் ஆத்திகம். புரிகிறதா??"

"ம்ம்ம்ம்ம்....."

"உனது செயலை கடவுளுக்கு அர்பணித்து விட்டால், நாத்திகனாகிய நீ, ஆத்திகனாய் ஆவாய். அது மட்டுமல்ல, அது நல்ல செயல் என்றால் கடவுள் ஆவாய் !!!"

முன் சொன்னது போல், இதற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளேன்.

Friday, October 19, 2007

ஓர் இரவு ஆசை.

மெரினா கடற்கரையில்,
என் காதலியின் மடியாம் கடற்மண்ணில் தலைசாய்த்து படுத்து,
அவளின் சிணுங்கல் சத்தமாம், அலைச்சத்தம் கேட்டு ரசித்து,
அவளின் பால்முகமாம், கரைபடிந்த நிலவின் முகம் பார்த்து,
அவளின் மூக்குத்தியின் மினுமினுப்பாம், நட்சத்திரத்தின் கண்ணடிப்பு கண்டு,
அவளின் வாசமாம், மீன் - கவிச்சை வாடையை நுகர்ந்து,
என்னை மறந்து கடல் மைந்தனாகும் வேண்டும் ஓர் இரவு மட்டும்........

Tuesday, October 2, 2007

என் காதலியின் மண நாள்.

என் பெயர் மதன். நான் தான் இந்த கதையின் நாயகன். எனது வாழ்வின் இரண்டு நாள் நடந்த சம்பவங்களை டைரியில் எழுதி உள்ளேன். அதைத்தான் படிக்க போகிறீர்கள்.

April 1, 2006.

எனக்கு டைரி எழுதி பழக்கம் இல்லை. இன்று எனது வாழ்வின் இறுதி இரவு. இதை எனது மரண வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளலாம். எனது தற்கொலையின் காரணம் நாளை எனது காதலியின் திருமண நாள். காதல் என்ற பைத்தியத்தால் இறந்த, இறக்க போகின்ற மிகப்பலரில் நானும் ஒருவன். அவள் மற்றவனுக்கு சொந்தமாகும் போது, எனது உயிர் எனக்கு சொந்மாக இருக்காது. இன்று முழுவதும் எனது அறையில் அழுது கண் வீங்கியிருந்தது. சாயந்திரம் லேசாக பசித்தது. சாப்பிட போகலாமென நினைத்து எழுந்தேன். முகத்தை கழுவும்போது தாடி அதிகமாக வளர்ந்து இருப்பதை உணர்ந்தேன். கதவை பூட்டிவிட்டு, வெளியே கிளம்பினேன். பார்பர் சாப் சென்று, தாடியை எடுத்தவுடன் அழகாய் தெரிந்தேன். பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். மருந்து கடைக்கு சென்று ஒரு சிரிஞ்சும், டையாபடிஷ்குரிய மருந்தும் வாங்கி கொண்டேன். காலை 7 மணிக்கு எழுந்ததும் காற்றடைத்த சிர்ஞ்சு மூலம் என்னை நானே மாய்த்து கொள்வேன்.

போன ஜூன் மாதம்தான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டெஷ்டிங் கோர்ஷ் படிக்க சென்ற இடத்தில் ராதாவை சந்தித்தேன். முதல் பார்வையில் அழகாக தெரியவில்லை. பலமுறை அவள் கண்களை பார்த்தபொழுது என்னில் ஏதோ இராசயன மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். கொஞ்ச நாள் கழித்து அவளை தவிர வேறு யாரும் அழகாய் தெரியவில்லை. காதலை சொல்ல துடித்தேன். சரியான சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில், "நீ இல்லையென்றால், ராஜா போல் வாழ்வேன். நீ என்னுடன் இருந்தால் சக்கரவர்த்தி போல் வாழ்வேன்." என்று ஏதோ உளறினேன். அவள் முழித்தாள். "உங்க அம்மா, அப்பா பார்த்து கொண்டதை விட நல்ல கணவனாக நல்லபடியாக பார்த்து கொள்வேன்" என்று தட்டுதடுமாறி சொல்லி முடித்தேன். இப்பொழுது புரிந்தவளாக, "முதலில் வேலையில் சேர். அப்புறம் பார்க்கலாம்" என்று சிரித்து சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

அதன்பின்னர் மிக கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலையை வாங்கி விட்டேன். ஆனால் கிடைத்தது என்னவோ பெங்களூரில். பிறந்து வளர்ந்த சென்னையை விட்டு பிரிய மனசில்லையென்றாலும் அவளுக்காக செல்ல முடிவு செய்தேன். அவளிடம் சென்று "நீ இல்லாமல் பல் குத்தும் துரும்பாய் இருந்தேன். நீ வந்ததால் பாறை உடைக்கும் இரும்பாய் மாறினேன். " என்று ஒரு கவிதையை சொல்லிவிட்டு வேலை கிடைத்ததை பற்றி சொன்னேன். "ரொம்ப சந்தோஷம். வேலையில் கொஞ்சம் செட்டில் ஆனவுடன் எங்கள் வீட்டில் வந்து பேசு." என்று சொல்லி சென்றாள்.

மூன்று மாதங்கள் பேசினோம். இனிப்பாய் காதல் வளர்ந்தது. டிசம்பர் இறுதியில் ஒரு நாள் அழுது கொண்டே பேசினாள். "எங்கள் வீட்டில் நம் காதல் விஷயம் தெரிந்து விட்டது. இனி என் செல்லுக்கு பேசாதீர்கள். என் பிரெண்ட், கல்யாணி நம்பர் தருகிறேன். அந்த நம்பரில் இருந்து மிஷ்டு கால் வந்தால் மட்டும் பேசுங்கள்." என்று கூறி ஒரு நம்பர் தந்தாள். அதன்பின்னர் நான் அவளிடம் பேசவில்லை. வேலைப்பளு காரணமாக மறந்து விட்டேன். என் பிறந்த நாள் ஜனவரி ஒன்றாம் தேதி அவளுடன் பேச நினைத்தேன். அவளுக்கு போன் செய்தேன். போனை ஆப் செய்து வைத்து இருந்தாள். அவள் பிரெண்டுக்கு போன் செய்தேன். எடுத்தது கல்யாணியின் அம்மா. அவர்கள் சொன்ன வார்த்தை கேட்டு இடி மெதுவாய் இதயத்தில் இறங்கியது. "கல்யாணி, ராதா நிச்சயர்தாத்திற்கு போய் இருக்கிறாள்." பின்னர் கல்யாணி மூலம் ராதாவின் திருமண நாளை அறிந்து கொண்டேன்.

மூன்று மாதங்கள் அழுது, வலித்து, புலம்பி, தவறாய் யோசித்து, ஓடின. வேலையை விட்டும் விலகி விட்டேன். தெளிவாய் எடுத்த முடிவுதான் இந்த தற்கொலை. எனது தற்கொலைக்கு காரணம் எனது உயிருள்ள காதல்.

April, 2, 2006.

அலாரம் அடித்து எழுந்தபோது மணி 6. நேற்று இரவு எடுத்த முடிவு ஞாபகம் வந்தது. பிரஷ், சிரிஞ்சு, டவலுடன் பாத்ரூம் நுழைந்தேன். காலை கடன் முடித்து முகம் கழுவும்போது உணர்ந்தேன். கன்னத்தில் மெலிதாக முடி முளைத்து இருந்தது. இதயத்தில் விழுந்த இடி இப்பொழுது மூளையில் விழுந்தது. அடியோடு அறுத்த பின்னர் முளைக்கும் இந்த முடிக்கே இவ்வளவு வீராப்பு இருக்கும்போது, பத்து மாதம் பழகிய அவளை இழந்த பின்னர் வாழும் வீராப்பு எனக்கு இல்லையா??

புதிதாய் பிறந்தது போல் பாத்ரூமில் இருந்து வெளி வந்தேன். வேலை கிடைக்க தூண்டுகோலாய் இருந்த ராதா நான் வாழ்வில் ஜெயிக்க ஏன் காரணமாய் இருக்க கூடாது?? வாழ்வை ஜெயித்து காட்ட வேண்டிய வெறி மனதில் வந்தது. கோயிலுக்கு சென்று அவள் பேரில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு வரும் வழியில் ஹிந்து பேப்பர் வாங்கி வேலை தேடும் வேலையில் இறங்கினேன்.

சக்கரவர்த்தியாய் இல்லாவிட்டாலும், ராஜாவாய் வாழ்ந்து காட்டுவேன்.