என் பெயர் மதன். நான் தான் இந்த கதையின் நாயகன். எனது வாழ்வின் இரண்டு நாள் நடந்த சம்பவங்களை டைரியில் எழுதி உள்ளேன். அதைத்தான் படிக்க போகிறீர்கள்.
April 1, 2006.
எனக்கு டைரி எழுதி பழக்கம் இல்லை. இன்று எனது வாழ்வின் இறுதி இரவு. இதை எனது மரண வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ளலாம். எனது தற்கொலையின் காரணம் நாளை எனது காதலியின் திருமண நாள். காதல் என்ற பைத்தியத்தால் இறந்த, இறக்க போகின்ற மிகப்பலரில் நானும் ஒருவன். அவள் மற்றவனுக்கு சொந்தமாகும் போது, எனது உயிர் எனக்கு சொந்மாக இருக்காது. இன்று முழுவதும் எனது அறையில் அழுது கண் வீங்கியிருந்தது. சாயந்திரம் லேசாக பசித்தது. சாப்பிட போகலாமென நினைத்து எழுந்தேன். முகத்தை கழுவும்போது தாடி அதிகமாக வளர்ந்து இருப்பதை உணர்ந்தேன். கதவை பூட்டிவிட்டு, வெளியே கிளம்பினேன். பார்பர் சாப் சென்று, தாடியை எடுத்தவுடன் அழகாய் தெரிந்தேன். பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டேன். மருந்து கடைக்கு சென்று ஒரு சிரிஞ்சும், டையாபடிஷ்குரிய மருந்தும் வாங்கி கொண்டேன். காலை 7 மணிக்கு எழுந்ததும் காற்றடைத்த சிர்ஞ்சு மூலம் என்னை நானே மாய்த்து கொள்வேன்.
போன ஜூன் மாதம்தான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டெஷ்டிங் கோர்ஷ் படிக்க சென்ற இடத்தில் ராதாவை சந்தித்தேன். முதல் பார்வையில் அழகாக தெரியவில்லை. பலமுறை அவள் கண்களை பார்த்தபொழுது என்னில் ஏதோ இராசயன மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். கொஞ்ச நாள் கழித்து அவளை தவிர வேறு யாரும் அழகாய் தெரியவில்லை. காதலை சொல்ல துடித்தேன். சரியான சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில், "நீ இல்லையென்றால், ராஜா போல் வாழ்வேன். நீ என்னுடன் இருந்தால் சக்கரவர்த்தி போல் வாழ்வேன்." என்று ஏதோ உளறினேன். அவள் முழித்தாள். "உங்க அம்மா, அப்பா பார்த்து கொண்டதை விட நல்ல கணவனாக நல்லபடியாக பார்த்து கொள்வேன்" என்று தட்டுதடுமாறி சொல்லி முடித்தேன். இப்பொழுது புரிந்தவளாக, "முதலில் வேலையில் சேர். அப்புறம் பார்க்கலாம்" என்று சிரித்து சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அதன்பின்னர் மிக கஷ்டப்பட்டு படித்து ஒரு வேலையை வாங்கி விட்டேன். ஆனால் கிடைத்தது என்னவோ பெங்களூரில். பிறந்து வளர்ந்த சென்னையை விட்டு பிரிய மனசில்லையென்றாலும் அவளுக்காக செல்ல முடிவு செய்தேன். அவளிடம் சென்று "நீ இல்லாமல் பல் குத்தும் துரும்பாய் இருந்தேன். நீ வந்ததால் பாறை உடைக்கும் இரும்பாய் மாறினேன். " என்று ஒரு கவிதையை சொல்லிவிட்டு வேலை கிடைத்ததை பற்றி சொன்னேன். "ரொம்ப சந்தோஷம். வேலையில் கொஞ்சம் செட்டில் ஆனவுடன் எங்கள் வீட்டில் வந்து பேசு." என்று சொல்லி சென்றாள்.
மூன்று மாதங்கள் பேசினோம். இனிப்பாய் காதல் வளர்ந்தது. டிசம்பர் இறுதியில் ஒரு நாள் அழுது கொண்டே பேசினாள். "எங்கள் வீட்டில் நம் காதல் விஷயம் தெரிந்து விட்டது. இனி என் செல்லுக்கு பேசாதீர்கள். என் பிரெண்ட், கல்யாணி நம்பர் தருகிறேன். அந்த நம்பரில் இருந்து மிஷ்டு கால் வந்தால் மட்டும் பேசுங்கள்." என்று கூறி ஒரு நம்பர் தந்தாள். அதன்பின்னர் நான் அவளிடம் பேசவில்லை. வேலைப்பளு காரணமாக மறந்து விட்டேன். என் பிறந்த நாள் ஜனவரி ஒன்றாம் தேதி அவளுடன் பேச நினைத்தேன். அவளுக்கு போன் செய்தேன். போனை ஆப் செய்து வைத்து இருந்தாள். அவள் பிரெண்டுக்கு போன் செய்தேன். எடுத்தது கல்யாணியின் அம்மா. அவர்கள் சொன்ன வார்த்தை கேட்டு இடி மெதுவாய் இதயத்தில் இறங்கியது. "கல்யாணி, ராதா நிச்சயர்தாத்திற்கு போய் இருக்கிறாள்." பின்னர் கல்யாணி மூலம் ராதாவின் திருமண நாளை அறிந்து கொண்டேன்.
மூன்று மாதங்கள் அழுது, வலித்து, புலம்பி, தவறாய் யோசித்து, ஓடின. வேலையை விட்டும் விலகி விட்டேன். தெளிவாய் எடுத்த முடிவுதான் இந்த தற்கொலை. எனது தற்கொலைக்கு காரணம் எனது உயிருள்ள காதல்.
April, 2, 2006.
அலாரம் அடித்து எழுந்தபோது மணி 6. நேற்று இரவு எடுத்த முடிவு ஞாபகம் வந்தது. பிரஷ், சிரிஞ்சு, டவலுடன் பாத்ரூம் நுழைந்தேன். காலை கடன் முடித்து முகம் கழுவும்போது உணர்ந்தேன். கன்னத்தில் மெலிதாக முடி முளைத்து இருந்தது. இதயத்தில் விழுந்த இடி இப்பொழுது மூளையில் விழுந்தது. அடியோடு அறுத்த பின்னர் முளைக்கும் இந்த முடிக்கே இவ்வளவு வீராப்பு இருக்கும்போது, பத்து மாதம் பழகிய அவளை இழந்த பின்னர் வாழும் வீராப்பு எனக்கு இல்லையா??
புதிதாய் பிறந்தது போல் பாத்ரூமில் இருந்து வெளி வந்தேன். வேலை கிடைக்க தூண்டுகோலாய் இருந்த ராதா நான் வாழ்வில் ஜெயிக்க ஏன் காரணமாய் இருக்க கூடாது?? வாழ்வை ஜெயித்து காட்ட வேண்டிய வெறி மனதில் வந்தது. கோயிலுக்கு சென்று அவள் பேரில் ஓர் அர்ச்சனை செய்துவிட்டு வரும் வழியில் ஹிந்து பேப்பர் வாங்கி வேலை தேடும் வேலையில் இறங்கினேன்.
சக்கரவர்த்தியாய் இல்லாவிட்டாலும், ராஜாவாய் வாழ்ந்து காட்டுவேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice
Post a Comment