Friday, July 13, 2007

ரசித்த திரைப்பாடல் வரிகள்

சமீபத்தில் நான் ரசித்த சில பாடல் வரிகளை பற்றி இந்த பதிவில் எழுத முடிவு செய்துள்ளேன். கவிஞர்கள் ஒன்று நினைத்து பாடல் எழுதி இருக்கலாம். நான் அதை வேறு மாதிரி உருவகப்படுத்தி இருக்கலாம். பதிவை படித்து என் ரசனையை பற்றி பின்னூட்டமிடுங்கள்.

நட்பு:

படம் - சென்னை - 600 028.
பாடல் - யாரோ???

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்...
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது...
நண்பா வா!


என்னை பொறுத்த வரை, காமம் இல்லாத காதல் நட்பு ஆகும். காமம் உள்ள நட்பே காதல் ஆகும். எதையும் எதிர்பாராமல் வரும் நட்பு காதலை விட சிறந்ததே....

காதல்:

படம் - சத்தம் போடாதே.
பாடல் - ஓ... இந்த காதல் என்ற பூதம்


உணவுகள் பிடிக்கலை. கனவுகள் பிடிக்குது.
காதலின் போதைக்கு அளவு இல்லை.
நண்பர்கள் பிடிக்கலை. நாய்க்குட்டி பிடிக்குது.
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை.

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே....
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே ...

நஞ்சென்றால் ஒரு முறை கொல்லுமடி,
நினைவுகளோ பல முறை கொல்லுதடி....

ஒருவனுக்கு காதல் வந்த பின்னர் உலகின் மிக சிறந்த அழகானவனாக தெரிவான். அந்த காதல் முறிந்தால் உலகிலேயே மிக அசிங்கமானவனாக தோற்றம் அளிப்பான். காதலுக்கு அந்த சக்தி உண்டு. காதல் தோல்வி தரும் வலியை விட, காதலியின் நினைவுகள் தரும் வலி அதிகமானது என்று சொல்லியதால் மிகவும் ரசித்தேன்.

ஆன்மிகம்:

படம்: புதுப்பேட்டை.
பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை...

உனக்கும் இல்லை.... இது எனக்கும் இல்லை..
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்.
நல்லவன் யார்? அட கெட்டவன் யார்?
கடைசியில் அவனே முடிவு செய்வான்....

1000 தடவை இந்த பாடலை கேட்டு இருப்பேன். கீதையின் கருத்தை வேறு விதத்தில் சொன்ன பாடல். மற்றவன் சொன்னான் என்பதற்காக உன் வாழ்க்கைப்பாதையை மாற்றாதே... உனக்கு சரி என்று பட்டதை செய். ஏனென்றால் கடவுளுக்கு மட்டுமே தெரியும், நீ நல்லவனா, கெட்டவனா என்று.


காமம்:

படம்: பெரியார்.
பாடல்: இடை தடவிக்கொள்ள...


நிலா விழும் வரை,
நீயாய் விடும் வரை,
இவள் உனது அடிமைதானே....

ஆண் சாதியும் பெண் சாதியும்,
இருக்கும் வரை
இருக்கும் எங்கள் இனம் !!!


காம வெறி பிடித்து அலையும் ஆண் இருக்கும் வரை விபச்சார தொழில் ஒழியாது என்பதை மறைமுகமாக சொன்னது போல் தோன்றுகிறது.


தத்துவம்:

படம்: உன்னாலே... உன்னாலே...
பாடல்: ஜூன் போனால்....

மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் உன் கூத்துக்காத்தான்....

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்...


மற்றவன் ஆடுவதை நீ பார்ககாதே... உன் ஆட்டத்தை நீ ஆடு.... இந்த உலகமே திரும்பி பார்க்கும். "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்று சொன்னான் வள்ளுவன். மனதை கட்டுப்படுத்தி, எண்ணங்களை சுருக்கி, உன்னை நீயே அடக்கி வைக்காதே என்று சொல்லி இருப்பாரோ கவிஞர்??

- சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன்.

Tuesday, July 10, 2007

நான் சந்தித்த பெண்கள் - கல்லூரிப்பருவம்.

கனவுகள் மட்டுமே நிஜம் என்று நினைக்கும் மனது, மனது நினைப்பதை செய்ய துடிக்கும் உடல், உடலை வளர்த்து கொள்ள, கெடுத்து கொள்ள தேவையான இலவச பணம். இது போதாத கல்லூரி வாழ்வை அனுபவிக்க??

நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் கற்று கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும் - கல்லூரி சேர்ந்தவுடன் நான் இதை உணர்ந்தேன். ஆகையால் ஒவ்வொரு பெண்ணை பற்றி எழுதிய பின்னர் அவர்களிடம் கற்ற பாடத்தையும் சொல்கிறேன்.

தீபம் - பெயருக்கு ஏற்ற மாதிரி கண்ணில் ஒளி கொண்டவள். நான் பிறந்த ஊரில் பிறந்தவள். வீட்டில் மூத்தவள் என்பதால் பொறுப்புணர்ச்சி கொண்டவள். எனக்கு இருக்கும் நண்பர்களில் முதன்முதலில் வீடு வாங்கிய தைரியசாலி & திறமைசாலி.

கேட்க வேண்டிய கேள்வி - புது மனை புகு விழாவை விமர்சையாக கொண்டாடிய நீ, உன் திருமணத்தை மட்டும்.... ஏன்???

கற்ற பாடம் - தலைமைப்பண்பு.

தி வேர்ல்ட் - பெயரே சற்று வித்தியசமான பெயர். எங்களது HOD, ஒருமுறை கூட சரியாக அழைத்தது இல்லை.கடினமாக உழைத்து வெற்றி கிட்டும் வரை போராடும் கஜினி இவள். சில சமயம், இவளை பார்த்தால் என் பாட்டியை சிறு வயதில் பார்த்தது போல் இருக்கும். நான் அளவுக்கு மீறி விளையாடியது இவளிடம்தான். அதன்பிறகு அவளுக்கு என்னை பிடிக்காமல் போய் விட்டது. :-(

கேட்க வேண்டிய கேள்வி: நான் தான் அந்த மின்மடல் அனுப்பினேன் என்று எப்படி கண்டுபிடித்தாய்?

கற்ற பாடம்: வெற்றி கிட்டும் வரை பொறுமையுடன் போராடு.

கவிதை - என்னை மிகவும் கவர்ந்தவள். என் அம்மாவிற்கு அடுத்து நான் அதிகம் சண்டை போட்ட பெண் இவள்தான். எது செய்தாலும் உருப்படியாக செய்வாள். செய்த வேலையை ப்ரசன்ட் செய்வதில் சிறந்தவள். நான் இறுதி வரை நட்பு பாராட்ட விரும்பும் மிக சிலரில் இவளும் ஒருத்தி. அதிகம் காயப்படுத்தியவள். அதிக முறை காயத்துக்கு மருந்து போட்டவள்.

கேட்க வேண்டிய கேள்வி: உதடு வரை ஒரு கேள்வி வந்ததடி... உனைக்கண்டு என் தொண்டை மென்று தின்னதடி...

கற்ற பாடம்: ஆடும் போது ஆடு. வேலை செய்யும்போது வேலை செய். உனது வாழ்வை என்சாய் பண்ணு.

ரவுடி - திமிர் பிடித்தவள். யாரிடமாவது பேசி கொண்டே இருப்பாள். பாரபட்சம் பார்க்காமல் சகஜமாக பழகுவாள். இதனாலே அவளை பல பேருக்கு பிடிக்காது. வீட்டில் மூத்த பெண் என்ற பொறுப்புணர்ச்சி இல்லாமல் போனதால் எனக்கும் இவளை பிடிக்காமல் போய் விட்டது.

கேட்க வேண்டிய கேள்வி:- மிகவும் பிடித்த பாடல் வரிகளை சொல்வேன். "மனம் இங்கே இவனிடம், உடல் அங்கே அவனிடம்.. அப்படியானால் உந்தன் பெயர்தான் என்ன?"

கற்ற பாடம்: சோறு மட்டும் அதிகமாயினும், குறைந்தாலும் கேடு அல்ல. சொற்களும்தான்.

சுபம்: நான் முதலில் கல்லூரியில் பேசிய பெண் இவள்தான். நான் போடுவது கடலை என்று தெரிந்து கடலை போட்டது இவளிடம்தான். ஆள் பார்த்து பேசுவதில் திறமைசாலி. ஆண் எந்த தவறு செய்தாலும் இந்த உலகம் கண்டுகொள்ளாது. அதே தவறை பெண் செய்தால் ஏற்று கொள்ளாது என்பதை இவளை பார்த்த பின்னரே உணர்ந்தேன்.

கேட்க வேண்டிய கேள்வி: ??

கற்ற பாடம்: எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசாதே. ஆள் பார்த்து பேசு.

பின் குறிப்பு: இதில் நான் குறிப்பிட்டவர்கள் அல்லது அவர்களை தெரிந்தவர்கள், இதை படிக்க நேரிடலாம் என்பதால் நல்ல பிள்ளை போல எழுதி உள்ளேன். :-) அடக்கி வாசித்து உள்ளேன்.