Showing posts with label என்னை கவர்ந்தவை. Show all posts
Showing posts with label என்னை கவர்ந்தவை. Show all posts

Sunday, March 16, 2008

அஞ்சாதே - திரைக்கண்ணோட்டம்.

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகிய தமிழ் படம். அருமையான கதை, ஆழமான திரைக்கதை, அற்புதமான இயக்கம் என ஒரு அழகிய கலவையாக இருக்கிறது, ”அஞ்சாதே”.



படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நிறைகின்றன. பாண்டியராஜனுக்கும், பிரசன்னாவுக்கும் மிக வித்தியசமான கதாபாத்திரங்கள். பாண்டியராஜனின் திருட்டு முழி
இல்லாமல், தனது கரகரப்பான குரலினால் மிரட்டுகிறார். சாக்லேட் பேபி ‘பிரசன்னா' வா இது??? தலைமுடி மறைக்க, ஒரு விழியால் மட்டும் பார்ப்பது, கையை ஒரு மாதிரி
சாய்த்து, மணி பார்ப்பது என்று அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அப்படி பார்ப்பது அழகு.

பாஷ்கர், லிவிங்க்‌ஷ்டன் அப்பாக்களுக்கு சரியான தேர்வு. ஒரு கை இல்லாமல் வரும் ‘குருவி' கேரக்டர், கடைசியில், “நான் செத்துருவேனடா??” என கேட்டு இறக்கும் போது நெஞ்சை கரைய வைக்கிறார். பொன்வண்ணனும் தனது வேலையை செவ்வனே செய்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும், நரேன், அஜ்மல் நிஜ நண்பர்கள் போலவே வலம் வருகிறார். அஜ்மல் தனக்கு வேலை கிடைக்காத வருத்தத்தை கண்ணில் காட்டுகிறார். நரேன் தன் மேலதிகாரியை பார்த்து, “அப்ப, நீங்க பிடிங்க... ” என்று சொல்லும்போது மிளிர்கிறார். திரைப்படத்தின் பிற்பகுதியில் தமது கதாபாத்திரத்தின் தன்மை மாறுவதை எதர்த்தமாக காட்டியுள்ளனர், அஜ்மலும், நரேனும்.

மிஷ்கினை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையை பதித்து உள்ளார். பாண்டியராஜன்,பிரசன்னா இருவரும் அஜ்மல் வீட்டில் இருக்கும்போது காலை மட்டும் காட்டி காட்சி அமைத்தது ஒரு எடுத்துக்காட்டு. 'குருவி' கேரக்டரின் மனைவி முகத்தையும், பாண்டியராஜனின் அடியாள் அந்த மொட்டையின் முகத்தையும் காட்டாமல் இருப்பதில் பாலச்சந்தரை ஞாபகப்படுத்துகிறார். டயலாக் அதிகம் இல்லாமல் காட்சியில் அழுத்ததை காட்டுவதில் மணிரத்னத்தை ஞாபகப்படுத்துகிறார். கடத்திய பெண்ணின் உள்ளாடைகளை பார்சல் பண்ணி அனுப்பும் காட்சி ஒரு உதாரணம். ஒரு பெண்ணை அடிப்பதை அவுட் ஆஃப் ஃபொகஷில் காட்டுவது இயக்குனரின் மெச்சூரிட்டியை காட்டுகிறது.

இவ்வளவு பாஷிடிவ் பாயிண்ட் இருந்தும் ஒரு சில குட்டுகள் இருக்கின்றன. கடுமையாக உழைத்தாலும் அதற்கு சரியான பலன் கிடைக்காது என்ற ஒரு தவறான மெஷெஜ்
சொல்லப்பட்டுள்ளது. தனது மகள் நிர்வாணமாக இருக்கிறாள் என்று உணர்ந்தும் ஒரு ஆடையை கூட எடுக்காமல் தந்தை செல்வது ஒரு உறுத்தல்தான்.

இப்படி சில குட்டுகள் இருந்தாலும், அது மற்ற பாசிடிவ் பாயிண்டுகளால் மறைந்து விடுகின்றனர். ஆக மொத்ததில் தியேட்டருக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய படம் இது.

Sunday, March 2, 2008

மனம் மயக்கும் மடி கணினி !!!

மடி மீது அமர்ந்து,
மணிக்கணக்கில் மன்றாடினாலும்,
மறுத்து பேசா என் அருமை,
மடி கணினியே !!!



தனக்கென்று ஆசையில்லாமல்,
தனக்கென்று வாழாமல்,
தவப்புதல்வன் எனக்காக,
தரிசாவதில் நீ என்
தாய்க்கு நிகரே !!!

கண்ட நேரத்தில் 'Hang' ஆகி,
கலவரப்படுத்தி ரசிப்பதில்,
கண்டவன் 'Hack' பண்ணி,
கடத்தி விடுவானோ என்று அச்சுறுத்துவதில்,
காதலி நீ !!!

சில நேரம் ஆறுதல் என்ற பெயரில்,
சில 'Updates' கொடுத்து
சில நேரம் 'Advice' என்ற பெயரில்,
சில 'Recommendation' கொடுக்கும்,
சினேகதி நீ !!!

ஆண் விரும்பும்
அத்தனை அழகு இருந்தும்
அடக்கமாய்,
அகங்காரம் இல்லாமல் இருப்பதில்,
அழகி நீ !!!

Tuesday, January 8, 2008

நானும் 2007ம்

இந்த 2007ம் வருடத்தில், எனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பே இந்த பதிவு. இது நான் எனக்காக எழுதும் பதிவு. என்னை கவர்ந்த, பாத்தித்தவைகள் பின்வருமாறு...

சாதனை: முதுநிலை கல்லூரியில் சேர்ந்தது, தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது.

உணர்ந்தது: பிறர் வெறுக்காத அளவுக்கு, நானே ரசிக்கும் அளவுக்கு, எனக்கு எழுத தெரியும் என்று உணர்ந்தேன். இளநிலை கல்லூரி முடிந்தவுடன், எனக்கு படிப்பே வராது என்று நினைத்தது, தவறு என்று உணர்ந்தேன்.

கற்றது: உன் கருத்தை வெளியிடும்போது, பூ மட்டும் வராது, பூகம்பமும் வரும், பின்னூட்டம் வடிவில்.

புதிய நண்பர்கள்: வருண் என்ற அலுவலக கூட்டாளி. முதுநிலை கல்லூரியில் சில நண்பர்கள்.

சென்ற புதிய நாடு: மலேசியா

சென்ற புதிய ஊர்: காளகஷ்தி.

சிறு வருத்தம்: சிலர் தவறாக புரிந்து கொண்டு, மனதை காயப்படுத்தியது.

பெரிய வருத்தம்: ஆருயிர் நண்பன் ஒருவனை இந்த வருடம் முழுவதும் பார்க்கவில்லை. (அதனால்தான், இந்த வருடம் நன்றாக இருந்ததோ?? :-))

ரசித்த புத்தகங்கள்: சிகரத்தை நோக்கி - வைரமுத்து, Eat That Frog - Brian Tracy

ரசித்த திரைப்படம்: மொழி, பொல்லாதவன், பெரியார்.

ரசித்த பாடல்: யோகி-பி யின் மடை திறந்து ரீ-மிக்ஷ் பாடல், வளையல் கரங்களை பார்க்கிறேன்.

உருக வைத்த விஷயம்: கல்லூரி திரைப்படத்தின் முடிவு.

எதிர்கால எதிர்பார்ப்பு: இந்த வருடம் போல் எல்லா வருடமும் இருக்க வேண்டும்.

எதிர்பாராத திருப்பம்: என் அழகியுடன் எனது முதல் திருமணம்.

உருப்படியாக செய்த விஷயம்: பட்ஜெட் போட ஒரு எக்ஷல் ஷீட் தேடி பிடித்தது. அது மற்றவருடன் பகிர்ந்தது.

2008ன் தீர்மானம்: ஒன்றே செய் !!! நன்றே செய் !!! இன்றே செய் !!!

மொத்ததில் ஒரு ரசிகனாக, மாணவனாக, அலுவலகத்தில் நல்ல பொறியாளனாக எனக்கு வெற்றியை மட்டும் அள்ளி தந்த வருடம் 2007. அந்த வருடம் முடிந்ததில் வருத்தம் அதிகம் தான்... இருந்தாலும், "வருங்காலம் வசந்த காலம்... நாளும் மங்களம்..." என்ற நம்பிக்கையுடன்


வருக, 2008ம் ஆண்டே வருக !!!
அனைவருக்கும் நல்லதையே அள்ளித்தருக !!!

Tuesday, December 4, 2007

காதல் சொல்ல வந்தேன்...

"மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என்று நான் கூறியதை கேட்டு, பூவிதழ் விரித்து,
"என்ன மீன் பண்ற?" என்று 'அலைபாயுதே' ஷாலினி மாதிரி கேட்டாய்.

"உன்னை நல்லபடியாக பார்த்து கொள்வேன்." என்று கண் பார்த்து கூறினேன்.

"'அந்நியன்' பட டயலாக் எல்லாம் சொல்லாதே !!" என்று முறைத்தாய்.

"உன்னுடன் இறுதி வரைக்கும் வாழ விரும்புகிறேன்." என்றேன் தட்டுத்தடுமாறி.

"அதற்கு நீ நண்பனாய் இருந்தால் போதுமே.." என்றாய் நக்கலாய்.

"உன்னை திருமணம் செய்து கொண்டு, சந்தோஷத்தை மட்டும் உன் கண்களில் கண்டு, மடிய விரும்புகிறேன்." என்று நீளமாய் கூறி முடித்தேன்.

என் கண்களை படித்த நீ, "என்னை திருமணம் செய்து கொள்ள 'காதல்' என்பது குறுக்கு வழியா?" வினவினாய்.

"இல்லை. திருமணம் செய்து கொள்ள உன்னை காதலிக்கவில்லை. காதல் செய்வதால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்." தீர்க்கமாய் சொன்னேன்.

"ஓ.. அப்படியா?? காதலிக்கும் போது என்ன செய்வாய்? திருமணம் முடிந்த பின்னர் என்ன செய்வாய்??" என்று குறும்பாய் கேட்டாள்.

"இது வரை 'உலக அழகி' பட்டம் பெற்ற எல்லாருடைய பெயர் பட்டியல் எடுப்பேன். எல்லோருக்கும், 'என் காதலி அந்த போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்' என்று கடிதம் அனுப்பி அவர்கள் திமிர் குறைப்பேன்." என்றேன் பெருமிதத்துடன்.

உள்ளம் மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல், "ப்பூபூ... இவ்வளவுதானா?? மணலை கயிறாய் திரிப்பது, வானை வளைப்பது, போன்ற காரியத்தை செய்ய மாட்டயா??" என்றாய்.

"செய்ய முடியாதவற்றை பற்றி நான் வெளியில் சொல்வதில்லை. இன்னும் கேள். " என்று கூற, அலட்சியமாய் பார்ப்பது போல பாவனை காட்ட முயற்சி செய்து தோற்றாய்.

"'உன் முகத்தை பார்த்த பின்னர் தான் கடவுள் சந்திரனை படைத்தானோ??' என்று கவிதை என்ற பெயரில் கண்டதை சொல்வேன்." இதை கேட்டு, வந்த புன்னகையை மறைக்க உதடை மடித்தாய்.

"இப்படி பெரிய பொய் சொன்னாலும், அதை கேட்டு வெட்கப்படும் உன் அழகை ரசிப்பேன்." கண்ணடித்து சொன்னேன்.

பொய் கோபம் காட்டி, "சரி... சரி... கல்யாணம் செய்தால், என்னவெல்லாம் செய்வாய்??"

"நீ நால்வருக்கு மட்டும் மிக அழகாய் தெரிவாய். அந்த நால்வரில், நான் இருவராக இருக்க விரும்புகிறேன்". இது உனக்கு விளங்கவில்லை என்பது உனது புருவ அசைவில் இருந்தே தெரிந்தது.

"விளக்கமாய் சொல்கிறேன்... உன் தந்தைக்கு தாயாக தெரியும்போது, அழகாய் தெரிவாய். காதலனுக்கு, காதலியாய் இருக்கும்போது, அழகாய் தெரிவாய். கணவனுக்கு, தன் குழந்தையை சுமக்கும்போது அழகாய் தெரிவாய். மகனுக்கு, தாயாய் இருக்கும்போது அழகாய் தெரிவாய்." என்று கூறி மூச்சு வாங்கினேன்.

"ம்ம்ம்... காதலனாகவும், கணவனாகவும் என் அழகை ரசிக்க விரும்புகிறாய். அப்புறம்... " ஆர்வத்துடன் கேட்டாய்.

"உன் தந்தை உன்னை இந்த உலகத்திற்கு கொடுத்து என்னை பைத்தியக்காரனாய் ஆக்கியது போல, உன் பிரதியை உலகிற்கு கொடுத்து, என்னை போல் ஒருவனை பைத்தியக்காரன் ஆக்குவேன்..." மெல்லிய புன்னைகையுடன் சொன்னேன்.

"அவ்வளவுதானா?? இன்னும் இருக்கா??" உஷ்ண பெருமூச்சு ஒன்று விட்டாய்.

"என் மரணத்தில் மட்டுமே உன் கண்ணீரை காண்பேன்." என்று கடைசியாய் என் பிரம்மாஷ்திரத்தை பிரயோகித்தேன்.

"உண்மையாத்தான் சொல்றியா??" என நீ கேட்கும்போது, உன் கண்ணில் இருந்து நீர் வருவதை உணர்ந்தேன்.

உன்னிரு கரத்தையும், பிடித்து என் இரு கரத்தில் பொருத்தி, என் உதடு பதித்து, உன் இரு விழிகள் ஊடுருவி உன் இருதயத்தில் எதிரொலிக்கும்படி சொன்னேன், "ஐ மீன் இட்...."

பூமிக்கு மட்டும் உன் வெட்கப்படும் முகத்தை காட்டி, "நானும் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்." என முணுமுணுத்தாய்.

"என்ன மீன் பண்ற??" வாய் வரை வந்த கேள்வி, தொண்டையிலே செத்தது.



பின் குறிப்பு: இது கதையோ, கவிதையோ இல்லை. "ஓரு பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்தலாம்." என்ற கேள்விக்கு எனது பதில். எனது இந்த கற்பனையை உபயோகப்படுத்த விரும்புபவர்கள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அதன் முடிவை பின்னூட்டமாக கண்டிப்பாக இட வேண்டும்.

Tuesday, September 4, 2007

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !!!

இன்று ஆசிரியர் தினம். எனக்கு பள்ளியில், கல்லூரியில் பாடம் எடுத்த ஆசிரியர்கள் பலர். சிறு சிறு விஷயங்களை கற்று கொடுத்த நண்பர்கள், தோழிகள் கூட என் ஆசிரியர்களே. அவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இவர்கள் பேரை எல்லாம் சொல்லி வாழ்த்து சொல்ல ஆரம்பித்தால் விடிந்து விடும். எனவே எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த இருவரை பற்றி மட்டும் இப்பதிவில் எழுத போகிறேன்.

முதலாமவர் திரு.வி.ராமநாதன். எங்கள் ஹாஷ்டல் வார்டன் இவர். கல்லூரியில் பேராசிரியர் இவர். மிகவும் அமைதியானவர், ஆனால் அழுத்தமானவர். தலையாட்ட வேண்டிய இடத்தில் மெதுவாக தலை ஆட்டிவிட்டு, 'முடியாது' சொல்ல வேண்டிய திடமாக முடியாது என்பார். யாராவது யாரைப்பற்றி குறை சொன்னால் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கோண்டே இருப்பார். நடுவில் எதுவும் சொல்ல மாட்டார். எல்லாம் கேட்டு முடித்தவுடன், "பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விடுவார்.

இவர் மிகவும் எளிமையானவர். நான் இவரிடம் கேட்ட முதல் கேள்வி, "இங்க வார்டன் யார்?" இவர்தான் என் பெயரில் பதினெட்டாயிரம் ரூபாய்க்கு முதன்முதலில் செக் போட்டு கொடுத்தவர். இறுதி ஒரு வருடம் மட்டுமே இவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொட்டேஷன் வாங்குவது எப்படி,அமைதியாய், அதிகாரமாய் பேசுவது எப்படி போன்ற விஷயங்களை இவரிடம் கற்றுக்கொண்டேன். இவர் என்ன பாடம் எடுத்தார் என்பது சத்தியமாக ஞாபகம் இல்லை.

பின்னாளில் நான் மேனஜரானால், என் மேல் இவரின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.

அடுத்தவர் திரு.சுப்புராஜ் அவர்கள். "ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?" என்ற எனது இலக்கணத்துக்கு சிறிதும் மாறாதவர். ரஜினியின் வசனம் 'அதிருதுல்ல...' வசனத்துக்கு சரியான ஆள் இவர்தான். இவரை கண்டாலே எங்க டிபார்மண்டில் உள்ள அனைவரும் மிரள்வார்கள். அதிகம் பேசுபவர், ஆனால் ஆழ்ந்த அர்த்தத்துடன் பேசுவார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை வாயால் சொல்லி புரிய வைக்காமல், நடைத்தையில் புரிய வைத்தவர். ஒரு கொள்கை இருந்தால் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார். கண் பார்த்து பேசினால் எவரையும் அடக்கலாம் என்பதை இவரை பார்த்த பின்னரே உணர்ந்தேன். எனக்கு தெரிந்து மாணவர்கள் எல்லோரும் நிஜமாக பயந்தது இவருக்கு மட்டுமே.

ஒரு முறை இவரது வகுப்பில், என் நண்பன் ஒரு பெண்ணை பார்த்து கொண்டே இருந்தான். அவர், அவனுக்கு மட்டுமே புரியும்படி அவனை அப்பொழுதே மிரட்டினார். அவன் செய்த தவறு கூட மற்ற யாருக்கும் புரியாதபடி பேசினார். இவரிடம் எனக்கு பிடித்த மிக முக்கியமான பழக்கம் - 'பெண்களுக்கு தனியாக சலுகை தர மாட்டார்'

பின்னாளில் நான் ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்குமானால், அவரின் பாதிப்பு என்னிடம் இல்லாமல் இருக்காது.

இரு பிள்ளைகள் இருந்தாலே பெற்றொர்களால் சரிவர கவனிக்க இயலாது. ஐம்பது அல்லது அறுபது பிள்ளைகளை வைத்து கொண்டு திண்டாடும் ஆசிரியர்கள், கடவுளுக்கு மேல்தான்.....

Friday, July 13, 2007

ரசித்த திரைப்பாடல் வரிகள்

சமீபத்தில் நான் ரசித்த சில பாடல் வரிகளை பற்றி இந்த பதிவில் எழுத முடிவு செய்துள்ளேன். கவிஞர்கள் ஒன்று நினைத்து பாடல் எழுதி இருக்கலாம். நான் அதை வேறு மாதிரி உருவகப்படுத்தி இருக்கலாம். பதிவை படித்து என் ரசனையை பற்றி பின்னூட்டமிடுங்கள்.

நட்பு:

படம் - சென்னை - 600 028.
பாடல் - யாரோ???

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம்...
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது...
நண்பா வா!


என்னை பொறுத்த வரை, காமம் இல்லாத காதல் நட்பு ஆகும். காமம் உள்ள நட்பே காதல் ஆகும். எதையும் எதிர்பாராமல் வரும் நட்பு காதலை விட சிறந்ததே....

காதல்:

படம் - சத்தம் போடாதே.
பாடல் - ஓ... இந்த காதல் என்ற பூதம்


உணவுகள் பிடிக்கலை. கனவுகள் பிடிக்குது.
காதலின் போதைக்கு அளவு இல்லை.
நண்பர்கள் பிடிக்கலை. நாய்க்குட்டி பிடிக்குது.
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை.

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே....
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே ...

நஞ்சென்றால் ஒரு முறை கொல்லுமடி,
நினைவுகளோ பல முறை கொல்லுதடி....

ஒருவனுக்கு காதல் வந்த பின்னர் உலகின் மிக சிறந்த அழகானவனாக தெரிவான். அந்த காதல் முறிந்தால் உலகிலேயே மிக அசிங்கமானவனாக தோற்றம் அளிப்பான். காதலுக்கு அந்த சக்தி உண்டு. காதல் தோல்வி தரும் வலியை விட, காதலியின் நினைவுகள் தரும் வலி அதிகமானது என்று சொல்லியதால் மிகவும் ரசித்தேன்.

ஆன்மிகம்:

படம்: புதுப்பேட்டை.
பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை...

உனக்கும் இல்லை.... இது எனக்கும் இல்லை..
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்.
நல்லவன் யார்? அட கெட்டவன் யார்?
கடைசியில் அவனே முடிவு செய்வான்....

1000 தடவை இந்த பாடலை கேட்டு இருப்பேன். கீதையின் கருத்தை வேறு விதத்தில் சொன்ன பாடல். மற்றவன் சொன்னான் என்பதற்காக உன் வாழ்க்கைப்பாதையை மாற்றாதே... உனக்கு சரி என்று பட்டதை செய். ஏனென்றால் கடவுளுக்கு மட்டுமே தெரியும், நீ நல்லவனா, கெட்டவனா என்று.


காமம்:

படம்: பெரியார்.
பாடல்: இடை தடவிக்கொள்ள...


நிலா விழும் வரை,
நீயாய் விடும் வரை,
இவள் உனது அடிமைதானே....

ஆண் சாதியும் பெண் சாதியும்,
இருக்கும் வரை
இருக்கும் எங்கள் இனம் !!!


காம வெறி பிடித்து அலையும் ஆண் இருக்கும் வரை விபச்சார தொழில் ஒழியாது என்பதை மறைமுகமாக சொன்னது போல் தோன்றுகிறது.


தத்துவம்:

படம்: உன்னாலே... உன்னாலே...
பாடல்: ஜூன் போனால்....

மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் உன் கூத்துக்காத்தான்....

சிறை இருக்கும் மனங்களை பறவை செய்...


மற்றவன் ஆடுவதை நீ பார்ககாதே... உன் ஆட்டத்தை நீ ஆடு.... இந்த உலகமே திரும்பி பார்க்கும். "வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்று சொன்னான் வள்ளுவன். மனதை கட்டுப்படுத்தி, எண்ணங்களை சுருக்கி, உன்னை நீயே அடக்கி வைக்காதே என்று சொல்லி இருப்பாரோ கவிஞர்??

- சகலத்தையும் ரசிக்கும் சாதரண ரசிகன்.

Monday, June 4, 2007

நான் மிகவும் ரசிக்கும் பாடல்.

அனைவரும் ரசிக்கும்படியான இசை. எல்லோருக்கும் புரியும்படியான கவிதை வரிகள். மெய் மறக்க செய்யும் பாலாவின் குரல்.




இப்பாடலில் நான் ரசிக்கும் வரிகள்.
"கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க !!!
பாறைக்குள் வேரை போல வெற்றி கொள்க !!!"