நான் ரவி. என் நண்பன் ராஜா. பொறியற் கல்லூரியின் முதல் வருடத்தில் சந்தித்தேன். அழகானவன் அல்ல. முகத்தில் கவர்ச்சி உள்ளவன். இவனுடன் பேசினால் முதல் ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய அறிவாளி போல் தோன்றும். அடுத்த ஐந்து நிமிடத்தில் உலகின் மிகப்பெரிய முட்டாள் போல் தோன்றும். பேசும் கலையில் வல்லவன். இருவர் பேரும் ஒரே எழுத்தில் ஆரம்பிப்பதால் இருவரும் ஒரே பேட்ச். முதல் நாள் லேபில் நாங்கள் இருவரும் வெளியே அனுப்பபட்டோம். வெளியே வந்தோம். "சந்தியா கூட நாம கடலை போடக்கூடாது என்பதற்காக அனுப்பிட்டாண்டா..." என்று வெறுப்புடன் கூறினான். மற்றொரு நாள், வெற்றிகரமாக எக்ஷ்பெரிமெண்ட் செய்து முடித்தான். "எப்படி? எனக்கு சொல்லிக்கொடு." என்றாள் சந்தியா. வழிவான் என்று நினைத்தேன். "உன் ப்ரொவசரிடம் போய் கேளு" என்று வெறுப்புடன் கூறினான்.
புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுப்பான் என்று நினைத்தால் ரசிப்பான். ரசிப்பான் என்று நினைத்தால் கண்டு கொள்ள மாட்டான். கவலை பட தெரிந்தவன் நான். கவலையை ரசிக்க தெரிந்தவன் அவன். இனிக்க இனிக்க பழகினோம். பழக பழக இனித்தான் ராஜா. ஒரு நாள் என்னிடம் சொன்னான், "சந்தியா என்னை காயப்படுத்தறாடா." அவன் கண்ணை பார்த்தேன். கண்ணில் காதல் தெரிந்தது. எலியும் பூனையுமாக இருந்தார்களே? "அவளிடம் சொல்" என்றேன். "வேலை கிடைத்தபின் சொல்கிறேன்". என்று பதில் கூறினான்.
காலம் உருண்டோடியது. கல்லூரியின் இறுதி நாள். வேலை கிடைக்காமல் நான் வருத்தத்தில் இருந்தேன். அவனோ, "வேலை கிடைத்து இருந்தால் என் காதலை அவளிடம் சொல்லி இருப்பேன்." என்று சிரித்து கொண்டு சொன்னான்.
ஒரு வருடத்திற்கு பின்னர் எனக்கு மேற்படிப்புக்கு சீட் கிடைத்தது. அவனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. திருவனந்தபுரத்தில் அவனுடைய மூன்று மாத ட்ரெயினிங் முடிந்த பின் சந்தித்தோம். சம்பாதிப்பதால் அவன் கண்ணில் நம்பிக்கை ஜொலித்தது. நடுநடுவே ஆங்கிலம் பேசினான். "சந்தியாவிடம் சொன்னியா?" ஆர்வத்துடன் கேட்டேன். புன்னகைத்தான். காதல் தெரிந்த கண்ணில், இப்பொழுது வலி தெரிந்தது. வேறு பேச ஆரம்பித்தோம்.
ஒரு வருடம் கழித்து சந்தியாவிடமிருந்து மின்மடல் வந்தது. கல்யாண வரவேற்பு அது.சட்டென ராஜாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் மொபைல் எண் தேடி கண்டுபிடித்தேன்.
"ராஜாவா??"
"சொல்லுடா ரவி... "
"உன்னை பார்க்கணும். எங்க இருக்க?"
"நுங்கம்பாக்கத்தில் இருக்கிறேன். முக்கியமான விஷயமா?"
"ம்ம்.. அவசியமா உன்னை பார்க்கணும். சாயந்திரம் பார்க்கலாமா?"
"திருவல்லிக்கேணி வந்துரு.... பை."
அவன் அறையில் அன்று சந்தித்தேன். வருத்தத்துடன் இருந்தான். பழைய உற்சாகம் இல்லை. கண்ணில் வெறுமை இருந்தது.
"சந்தியாவிடமிருந்து வந்த மின்மடல் பார்த்தியா?" என்றேன்.
"இல்லையே. என்ன மின்மடல்?" ஆச்சரியத்துடன் கேட்டான்.
"அவளுடைய திருமண வரவேற்பு"
"ஓ!!! என்று திருமணம்?" அலட்டாமல் கேட்டான். வருந்துவான் என்று நினைத்து ஏமாந்தேன்.
"டிசம்பர் 7."
"வாட்???" அலறினான். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயங்கரமாய் சிரித்தான்.
"ஏன்?"
"என் தூரத்து உறவுக்காரப்பெண் ஒருத்தி இருக்கிறாள். தன்யா என்று பெயர். ஆறு மாத பழக்கம். என்னை கவர்ந்தவள். என்னால் ஈர்க்கப்பட்டவள். அவளுக்கு பிடிக்காதவருடன் டிசம்பரில் திருமணமாம். என்னுடன் கூறி வருத்தப்பட்டாள். அதில் சிறு வருத்தத்துடன் இருந்தேன். இப்ப இதை கேட்டவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம்"
"மடையனடா நீ??" கோபத்தின் உச்சிக்கு சென்றேன்.
"இருவருக்கும் வெவ்வேறு நாள் திருமணம் என்றால் நான் இரண்டு நாள் வருத்தப்படணும். ஓரே நாள் வருத்தம். அதுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லணும்."
"உன் காதல் உண்மை காதல் இல்லையா?"
"கூல்டா மச்சான்.... ஜெயித்தால் உண்மைக்காதல். தோற்றால் பொய் காதலா? என்ன லாஜிக்?? கீதையில் கண்ணன் என்ன சொல்லி இருக்கிறார்? 'கடமையை செய். பலனை எதிர்பாராதே.' காதல் செய்வது என் வயதுக்கு விதிக்கப்பட்ட கடமை. ஜெயித்தால் திருமணம். தோற்றால், அடுத்த கடமை. அதாவது அடுத்த காதல்."
"கேவலம்டா இது...."
"இதில் என்னடா கேவலம் இருக்கு? என் கம்பெனியில் இருந்து கிளையன்டிடம் ப்ரொபசல் கொடுப்போம். கிளையண்டுக்கு பிடித்தால் எங்களுக்கு ப்ரொஜக்ட் கிடைக்கும். இல்லையென்றால், அடுத்த கிளையன்ட். அடுத்த ப்ரொபசல் என்று போய்க்கிட்டே இருக்கணும்."
"அதுவும் இதுவும் ஒன்றா??"
"எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதாண்டா... நேற்று கிடைக்காததை நினைத்து வருத்தப்பட கூடாது. நாளை கிடைக்க இருப்பதை நினைத்து சந்தோஷப்படக்கூடாது. இன்றைக்கு இந்த நொடியை ரசித்தால் போதும்."
"மனதில் கிருஷ்ணன் என்று நினைப்பா??"
"நான் பெண்களை காதலிக்கும் வரை கிருஷ்ணன். ஒரு பெண் என்னை காதலித்த பிறகு அவளுக்கு மட்டும் நான் ராமன்." என்று கூறி கண்ணடித்தான்.
"உன் அம்மா உனக்கு நல்ல பெண் பார்ப்பாங்கடா...." என்று வாழ்த்தினேன்.
தற்சமயம் அவன் தாய் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சந்தோஷமாக இருக்கிறான், நவீன கண்ணன்.