Wednesday, December 12, 2007

கதைப்போட்டி... - சிறுகதை

அது ஒரு பன்னாட்டு நிறுவனம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் அனைத்து இறுதியாண்டு மாணவர்கள் மத்தியில் அடிக்கடி அடிபடும் நிறுவனம் இது. இதன் முக்கிய தொழில், மென்பொருள் தயாரித்து வெளிநாட்டில் விற்பனை செய்வதாகும். இதில் வேலை பார்க்கிறேன் என்று தப்பித்தவறி, ஆட்டோக்காரரிடமோ, வீட்டு ஓனரிடமோ சொன்னால், பர்ஸ் கிழிவது உறுதி. இந்த நிறுவனத்தில் சேர்வதே பெரிய விஷயம் என்ற நினைப்பில் சேர்ந்து, சேர்ந்த பின்னர், இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நொந்து கொள்பவர் பலர். அவர்களில் ஒருவன் தான் குமார். வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திலேயே அவன் வேலையை வெறுக்க ஆரம்பித்து விட்டான். இன்னும் அவன் அந்த நிறுவனத்தில் வேலை தொடர இரண்டு காரணம். ஒன்று சம்பளம், மற்றொன்று அஸ்வினி. அஸ்வினி அவனது உயிர்த்தோழி. இருவரும் ஓரே கல்லூரியில ஒன்றாக படித்து, ஓரே நிறுவனத்தில் வேலை கிடைத்து, ஒன்றாய் டிரெயினிங் முடித்து, ஒரே அக்கௌண்டில் வெவ்வேறு பிராஜக்ட்டில் வேலை செய்கின்றனர்.

எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, காலை 10:30 மணிக்கு காபி சாப்பிட காண்டீன் வந்து விடுவார்கள். அப்படி ஒரு நாள், டிசம்பர் 10, 2007,

"என்னடா பலமா யோசிக்கிற... என்ன விஷயம்??? நேத்து பார்த்த, 'கல்லூரி' பட சோகமான முடிவு ஞாபகமா?"

"இல்லைடி.. அது வந்து..."

"ஷ்கிரிப்ட் எரர் வந்ததுன்னு சொன்னியே... அதுவா??"

"ம்ஹூம்... என்னன்னா...."

"உன் டீம்ல நார்த் இண்டியாவில் இருந்து ஒரு பொண்ணு வந்து இருக்கியே... அத பத்தியா??"

"சீ.. சீ... இது வேற வி....."

"வேறு என்னதான் விஷயம். சொல்லித்தொலையேன்...."

"நீ சொல்ல விட்டாத்தானேடி சொல்வேன்.... "
அதிசயமாய் வாயை மூடினாள்.

"'சர்வே'சன் ஒரு கதைப்போட்டி நடத்துறார். அதைப்பத்தி தான் யோசிக்கிறேன்."

"யாரு?? 'சர்வே' நடத்துவாரே... அந்த ப்லாக்கரா?? "

"ம்ம்ம்ம்...."

"நீ அந்த போட்டியில் கலந்துக்க போறியா??"

'ஆம்' என்பது போல தலையாட்டினான்.
"என்ன ப்ரைஸ்??"

"நூறு அமெரிக்கன் டாலர். இருபத்தைந்து நமக்கு. எழுபத்தைந்து டாலர், உதவும் கரங்கரங்களுக்கு..."

"நல்லதுதானே.... எப்படி வின்னரை செலக்ட் பண்ணுவாங்க??"

"தெரியலை... யார் கதைக்கு, அதிகமா பின்னூட்டம் கிடைக்குதோ, யாருக்கு அதிகமாக வாக்கு கிடைக்குதோ, அவங்க தான் வின்னர்.."

"போட்டியில் கலந்துக்கறது தப்பு இல்லை. ஆனால் ப்ரைஷ் கிடைப்பது கஷ்டம்தான்." நக்கலாய் சிரித்தாள்.

அக்னிபார்வை பார்த்தான் குமார். அஸ்வினி, அவனது கோபத்தை புரிந்து கொண்டு, சிரிப்பை அடக்க முயற்சி செய்தாள். "சரி... சரி... முறைக்காதே... உனது ப்லாக்கை, நானும், நம்ம ப்ரெண்டஸ்தான் படிக்கிறோம். அதில் ஒருத்தனும் உனக்கு கமெண்ட்ஸ் எழுதுவதில்லை... நான் தான், பாவமென்று கமெண்ட்ஸ் எழுதுறேன். பின்ன எப்படி நீ ஜெயிப்ப??"

"அதைப்பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஐயாகிட்ட சூப்பர் ஐடியா இருக்கு..."

"கேட்காவிட்டாலும் நீ என்னை விடப்போறதில்லை. சொல்லு...."

"நானே என் கதைக்கு, கமெண்ட்ஸ் எழுதினா???"

"நீ மட்டும் புத்திசாலி என்று நினைக்காதே.... பெயர் வைத்து கண்டு பிடிச்சுடுவாங்க..."

"நான் என்ன அவ்வளவு தூரத்திற்கு மடையனா?? கூகிள் அகௌண்ட், ஐம்பது கிரியேட் பண்ணி, ஒவ்வொரு அகௌண்ட் யூஸ் பண்ணி பின்னூட்டம் எழுதுவேன். "

"மடத்தனமான ஐடியா இது.... ஒரு ஆயிரம் ரூபாய்க்கு இந்த பாடா??"

"எனக்கு ஜெயிக்கணும்... அவ்வளவுதான்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய். என்
ப்லாக்கோட ரீடர்ஸ் அதிகம் ஆவாங்க.... ப்ரைஸ் கிடைக்கவும் சான்ஸ் இருக்கு..."

"அது சரி... திடீர்னு சர்வே எடுத்து ரிசல்ட் அனௌன்ஸ் பண்ணால் என்ன பண்ணுவ??"

"அது இதை விட ரொம்ப சிம்பிள்...... நான் ஏற்கனவே கிரியேட் பண்ண அகௌண்டை யூஷ் பண்ணி, சர்வேயில் எனக்கு அதிகமா வோட்டு போட்டு கொள்வேன்... "

"எக்கேடும் கெட்டுப்போ.... ஆனால் எனக்கு என்னமோ, இது ஒர்க்-அவுட் ஆகும் என்று தோணலை..."

"சரிதான் போடி.... சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்... "

"நத்திங் இஸ் பெட்டர் தான் நான்சென்ஸ்... சரி, நான் கிளம்புறேன்."

அஸ்வினி சென்றவுடன், குமார் தனது சிந்தனையை தொடர்ந்தான். தான் நினைத்தபடி, ஐம்பது கூகிள் அகௌண்ட் உருவாக்கி, அவனுடைய கதைக்கு அவனே பின்னூட்டம் எழுதி கொண்டான். டிசம்பர், 21ம் தேதி எல்லோருடைய கதைக்கும் பின்னூட்டம் எத்தனை வந்து இருக்கு என்று பார்த்தான். யாருடையதும் நாற்பதை தாண்டாத சந்தோஷத்தில் ஊருக்கு கிளம்பி போனான்.

கிறிஸ்துமஸ் விடுப்பு, புத்தாண்டு விடுப்பு எல்லாம் முடிந்து ஜனவரி 2ம் தேதி அலுவலகம் வந்தான். வழக்கம் போல அவனும், அஸ்வினியும் காண்டீன் சென்றனர். பரஸ்பரம், வாழ்த்து சொல்லி முடித்து, வழக்கமான கேள்விகள் எல்லாம் கேட்டு முடிந்து, அஸ்வினிதான் முதலில் கேட்டாள், "ஹேய்!!! சர்வேசன் ப்லொக் ரிசல்ட் என்னாச்சு??" பாதி குடித்து முடித்த காபியை அப்படியே விட்டுவிட்டு, கீழே ஓடினான். இந்தியா-பாகிஸ்தான் மேட்சில் எல்லா விக்கெட்டும் இழந்து ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஓடும் ரன்னரின் படபடப்பு அவனிடம் இருந்தது.

அவனது இருதய துடிப்பு அவனுக்கே கேட்கும் அந்த நிலையில், வந்தது முடிவு, "வெற்றி பெற்றவர் - குமார்.

வெற்றி பெற்ற குமாருக்கு வாழ்த்துக்கள் !!! தங்களின் ஜிமெயில் அகௌண்டிலிருந்து எனக்கு உங்கள் முகவரி குறித்து மின்மடல் ஒரு வாரத்தில் (ஜனவரி 8ம் தேதிக்குள்) அனுப்பவும். நீங்கள் அனுப்பாத பட்சத்தில் உங்கள் பரிசு பணம் 25$ 'உதவும் கரங்களுக்கு' வழங்கப்படும்." என்று....

முடிவு - 1:
சிறு புன்னகையுடன் ஜிமெயிலில் லாகின் செய்தான். தனது வீட்டு முகவரியை டைப் செய்யும்போது, இன்னொரு டாப்பில் ப்லாக்கரையும் ஓபன் செய்தான். எப்பொழுதும் மாடரெட் செய்ய ஒரு கமெண்டும் இல்லாத டாஸ்போர்டில் 104 பின்னூட்டம் இருப்பது கண்டு விக்கித்து போனான். அவன் அனுப்பிய அந்த கதைக்கு மட்டும் வந்த பின்னூட்டத்தின் எண்ணிக்கை 54. முன்னர் எழுதிய மற்ற போஷ்டுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 50. சொல்லொணா மகிழ்ச்சி கொண்டான்.

கொஞ்சம் யோசித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கூகிள் டாப்பிற்கு வந்து, தனது முகவரியை எடுத்து விட்டு, "இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் மகிழ்ச்சி. ஆனால் இதை முறையாக நான் பெறவில்லை. ஆகையால், இந்த பரிசு பணத்தை இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவருக்கோ, உதவும் கரங்களுக்கோ நீங்கள் தரலாம். அடுத்து போட்டி நடத்தினால், கண்டிப்பாக கலந்து கொள்வேன். நன்றி..." என்று சர்வேசனுக்கு மின்மடல் அனுப்பினான். பின்னால் நிழலாடுவது கண்டு திரும்பினான். அஸ்வினி, உதட்டோரம் சிறு புன்னகையுடன் நின்றாள்.

"நீ அடுத்த முறை கண்டிப்பாக ஜெயிப்பாய்."


முடிவு - 2
சிறு புன்னகையுடன், ஜிமெயில் லாகின் பேஜ் போனான். சிறிது நேரம் கண்ணை மூடி, யோசித்து, டைப் செய்தான். ஆனால், அந்த ஜன்னலோ சிவப்பாய் திட்டியது. மறுபடியும் யூசர் ஐடியும், பாஷ்வர்டும் டைப் செய்தான். மறுபடியும் அதே பதில். முகம் சிறுத்தது அவனுக்கு. விடாமல் வேறு பாஸ்வர்ட் முயற்சி செய்தும் அவனால் லாகின் செய்ய இயலவில்லை. 'உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தானே தீர வேண்டும். பரவாயில்லை இந்த பரிசும் பணமும் நல்ல காரியத்திற்குத்தானே பயன்படபோகிற்து. நல்லதுதான்' என்று அமைதி கொண்டான்.

பின்னால் வந்த அஸ்வினி கேட்டாள், "என்னடா ஆச்சு??". தான் வெற்றி பெற்ற விஷயத்தை கூறினான்.
"உன் வீட்டு முகவரி அனுப்ப வேண்டியது தானே..."
"பல அகௌண்ட் கிரியேட் பண்ணதால் என் அகௌண்ட் பாஸ்வேர்டு மறந்து போச்சு..." என்று உதடு பிதுக்கினான்.
முன்னொரு முறை ஏதோ காரணத்திற்கு அவன் பாஸ்வேர்டு அறிந்து கொண்ட அஸ்வினி ஒரு வாரம் கழித்து சொல்லலாம் என்ற முடிவில், சொன்னாள் "ஓ!! ஹென்றி..."


சர்வேசனின் 'நச்சென்று ஒரு கதை' போட்டிக்கு எழுதப்பட்ட சிறுகதை

9 comments:

யோசிப்பவர் said...

கமெண்டுகள் அடிப்படையில் வெற்றி பெற்றவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று சர்வேசன் சொன்னதாகத் தெரியவில்லையே. முடிவு - 1 : நேரமிருந்தால் இங்கே கொஞ்சம் பாருக்கள்!;)

மங்களூர் சிவா said...

இப்பிடி எல்லாம் பரிசு குடுத்தா தெனைக்கும் ஆபீஸிலும் வீட்டிலுமாக 20 மணி நேரம் 'நெட்'டு பாக்கிற நாங்க பின்னி பெடலெடுத்துற மாட்டோம்!!

நல்ல முயற்சி!!

Rama said...

யோசிப்பவரே,

கதையின் நாயகன், குமார், சர்வேசன் சொன்ன "வாக்காளர் தீர்ப்பு"ஐ தவறாக புரிந்து கொண்டான். இருந்தாலும் ஐம்பதுக்கும் மேலானோர்களுக்கு பிடிக்கும்படி எழுதிய காரணத்தினால்தான் ஜெயித்தான். அவன் அந்த வெற்றிக்கு தகுதியானவனே!!!

Anonymous said...

:-)

Nimal said...

நச் சற்றே குறைவு..
ஆனாலும் கதை மிகவும் நன்று...
வாழ்த்துக்கள்...

SurveySan said...

நல்ல கதை. ;)

பின்னூட்டம் பாத்து பரிசு கொடுக்கக் கூடாதுன்னு இத விட அழகா எப்படி சொல்ல முடியும் ;)

அரை பிளேடு said...

ஆமாம். குமார் எழுதிய கதை எங்கே.

அந்தக்கதைதான் இந்தக் கதையா :)

சென்ஷி said...

//மங்களூர் சிவா said...
இப்பிடி எல்லாம் பரிசு குடுத்தா தெனைக்கும் ஆபீஸிலும் வீட்டிலுமாக 20 மணி நேரம் 'நெட்'டு பாக்கிற நாங்க பின்னி பெடலெடுத்துற மாட்டோம்!!//

:))))

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

Rama said...

// இந்திரஜித்,

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்??? :-)

// நிமல்,

நன்றி!!! நல்ல கதை கிடைத்ததே எனக்கு சந்தோஷம்.... பங்கு பெறுவதே மகிழ்ச்சி...

// சர்வேசன்,

சர்வே எடுத்தும் முடிவு சொல்ல கூடாது என்று சொல்ல முயற்சி செய்தேன்.

// அரை பிளேடு
ஆமாம்பா, ஆமாம்... :-)

// மங்களூர் சிவா,
நீங்க 20 மணி நேரம்னா, நாங்க எல்லாம் 24 மணி நேரம்...