Sunday, March 16, 2008

அஞ்சாதே - திரைக்கண்ணோட்டம்.

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அழகிய தமிழ் படம். அருமையான கதை, ஆழமான திரைக்கதை, அற்புதமான இயக்கம் என ஒரு அழகிய கலவையாக இருக்கிறது, ”அஞ்சாதே”.



படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நிறைகின்றன. பாண்டியராஜனுக்கும், பிரசன்னாவுக்கும் மிக வித்தியசமான கதாபாத்திரங்கள். பாண்டியராஜனின் திருட்டு முழி
இல்லாமல், தனது கரகரப்பான குரலினால் மிரட்டுகிறார். சாக்லேட் பேபி ‘பிரசன்னா' வா இது??? தலைமுடி மறைக்க, ஒரு விழியால் மட்டும் பார்ப்பது, கையை ஒரு மாதிரி
சாய்த்து, மணி பார்ப்பது என்று அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் அப்படி பார்ப்பது அழகு.

பாஷ்கர், லிவிங்க்‌ஷ்டன் அப்பாக்களுக்கு சரியான தேர்வு. ஒரு கை இல்லாமல் வரும் ‘குருவி' கேரக்டர், கடைசியில், “நான் செத்துருவேனடா??” என கேட்டு இறக்கும் போது நெஞ்சை கரைய வைக்கிறார். பொன்வண்ணனும் தனது வேலையை செவ்வனே செய்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும், நரேன், அஜ்மல் நிஜ நண்பர்கள் போலவே வலம் வருகிறார். அஜ்மல் தனக்கு வேலை கிடைக்காத வருத்தத்தை கண்ணில் காட்டுகிறார். நரேன் தன் மேலதிகாரியை பார்த்து, “அப்ப, நீங்க பிடிங்க... ” என்று சொல்லும்போது மிளிர்கிறார். திரைப்படத்தின் பிற்பகுதியில் தமது கதாபாத்திரத்தின் தன்மை மாறுவதை எதர்த்தமாக காட்டியுள்ளனர், அஜ்மலும், நரேனும்.

மிஷ்கினை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையை பதித்து உள்ளார். பாண்டியராஜன்,பிரசன்னா இருவரும் அஜ்மல் வீட்டில் இருக்கும்போது காலை மட்டும் காட்டி காட்சி அமைத்தது ஒரு எடுத்துக்காட்டு. 'குருவி' கேரக்டரின் மனைவி முகத்தையும், பாண்டியராஜனின் அடியாள் அந்த மொட்டையின் முகத்தையும் காட்டாமல் இருப்பதில் பாலச்சந்தரை ஞாபகப்படுத்துகிறார். டயலாக் அதிகம் இல்லாமல் காட்சியில் அழுத்ததை காட்டுவதில் மணிரத்னத்தை ஞாபகப்படுத்துகிறார். கடத்திய பெண்ணின் உள்ளாடைகளை பார்சல் பண்ணி அனுப்பும் காட்சி ஒரு உதாரணம். ஒரு பெண்ணை அடிப்பதை அவுட் ஆஃப் ஃபொகஷில் காட்டுவது இயக்குனரின் மெச்சூரிட்டியை காட்டுகிறது.

இவ்வளவு பாஷிடிவ் பாயிண்ட் இருந்தும் ஒரு சில குட்டுகள் இருக்கின்றன. கடுமையாக உழைத்தாலும் அதற்கு சரியான பலன் கிடைக்காது என்ற ஒரு தவறான மெஷெஜ்
சொல்லப்பட்டுள்ளது. தனது மகள் நிர்வாணமாக இருக்கிறாள் என்று உணர்ந்தும் ஒரு ஆடையை கூட எடுக்காமல் தந்தை செல்வது ஒரு உறுத்தல்தான்.

இப்படி சில குட்டுகள் இருந்தாலும், அது மற்ற பாசிடிவ் பாயிண்டுகளால் மறைந்து விடுகின்றனர். ஆக மொத்ததில் தியேட்டருக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய படம் இது.

No comments: