Thursday, September 13, 2007

இறைவன் தந்த வரம்.

"வரம் ஒன்று தருகிறேன்...
கேள்" என்றான் இறைவன்.
கிள்ளி பார்த்தேன். வலித்தது.
நிகழ் காலம் தான்.
ஆழமாய் யோசிக்க ஆரம்பித்தேன்.

அம்புலி வரும் என்று
ஏமாந்து அமுதம் உண்ட,
வலிக்கா விட்டாலும்
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய,
குழந்தைப்பருவத்தை கேட்கவா?

ஏன்? எதற்கு? என்றுணராமல்,
பள்ளி ஆசிரியர்களை தெலுங்குப்பட
வில்லன்கள் போல பாவித்து,
படிப்பதை சுமையாக கருதிய
பள்ளிப்பருவத்தை கேட்கவா?

இனிமையில் இனிமையாக இனித்த,
இதயம் மறவா, எல்லோரும்
சென்று வர நினைக்கும்,
நட்பை உயிராக சுவாசித்த
கல்லூரி பருவத்தை கேட்கவா?

காதலியின் முதல் பார்வை,
காதலியின் முதல் ஷ்பரிஷம்,
முதல் முத்தம் கொடுக்க
உதடுகள் தடுமாறிய, காதலை
பருகிய நாட்களை கேட்கவா?

காதல் மனைவியுடன் இருந்த
முதல் சில மாதங்கள், உயிருக்குள்
உயிர் வளர்ந்த பல மாதங்கள்,
பிஞ்சு விரலால் கட்டுப்பட்ட
வாலிப நாட்களை கேட்கவா?

ஆயிரம் பேர் வேலை பார்க்கும்,
வருடம் ஆயிரம் கோடி
லாபம் மட்டுமே தரும், எனது
கனவில் மிதக்கும் எனது
கம்பெனியை தர கேட்கவா?

தீர்க்கமாய் யோசித்து, தெளிவாய்
முடிவெடுப்பதாக நினைத்து கேட்டேன்,
"இன்றைய பொழுதில், இந்த
நேரத்தை, இந்த நொடியை முழுதாய்
அனுபவிக்கும் மனம் வேண்டும்."

அழகாய், அழுத்தமாய், அளவாய்
புன்னகைத்தார். "அப்படியென்றால், ஆப்பிள்
சாப்பிட்டிருக்க கூடாது." நெற்றி சுருங்கி
விரிவதற்குள் மறைந்தார். 'நான்'
அழிந்து 'அது'வாகியிருந்தேன்.

பின் குறிப்பு:-

"உலகில் உள்ள உயிரினங்களில், மனிதனுக்கு மட்டுமே எதிர்காலம், இறந்த காலம் என்று உண்டு" என்று படித்ததை வைத்து எழுதிய கவிதை இது. இறந்த காலத்து வருத்தமும், வருங்காலத்து பயமும் இல்லையென்றால் மனிதன் சந்தோஷமாக இருப்பான் என்பது நம்பிக்கை.

4 comments:

prem said...

தாங்கள் கடவுளின் வரம் கேட்டது வரை புரிகிறது. ஏனோ கடவுளின் பதில் புரியவில்லை.


உங்கள் வரம் சிறந்தது. ஆனால் இந்த நிஜத்தை உணர மறுப்பதால் தான் மனிதன் கடவுளை படைத்தான். ஆனால் அந்த கடவுளிடமே நீங்கள் வரமாக கேட்டால் எப்படி கிடைக்கும்?


நான் வினவ விரும்புவது அதை மட்டும் அல்ல. ஒரு குறை... உங்கள் பின்குறிப்பை பற்றியது. ஒரு படைப்பாளியின் மொழி படைப்பே.. பின் எதற்கு பின்குறிப்பு? படைப்பில் பேசுங்கள். விளக்கமல்ல உங்கள் படைப்பு..

Rama said...

// ஏனோ கடவுளின் பதில் புரியவில்லை.

பகுத்தறிவு படைத்த அவனாக இருந்த அந்த மனிதன், ஐந்தறிவு படைத்த ஜீவனாகிறது.

// பின் எதற்கு பின்குறிப்பு?

இந்த கவிதையை சிலரால் புரிந்து கொள்ள முடியாத காரணத்தாலே பி.கு. எழுதினேன். அது மட்டுமன்றி, ஒரு கட்டுரை எழுதி முடித்தவுடன் 'Reference' போடுவதில்லையா?? அது போல்தான் இதுவும்.

//ஆனால் இந்த நிஜத்தை உணர மறுப்பதால் தான் மனிதன் கடவுளை படைத்தான். ஆனால் அந்த கடவுளிடமே நீங்கள் வரமாக கேட்டால் எப்படி கிடைக்கும்?

மனிதன் இறைவனை படைத்தற்கு காரணம் வாழ்வை அனுபவிக்க அல்ல என்பது எனது கருத்து. மனிதனால் புரிந்து கொள்ள முடியாத, செய்ய முடியாத செயல்களுக்கு காரணகர்த்தா ஒருவர் வேண்டும் என்பதாலே இறைவனை படைத்தான்.

prem said...

புரியாதது 'அது' மட்டும் அல்ல.. ஆப்பிளும் தான்.

Rama said...

ஆப்பிள் சாப்பிட்டதால்தான் பகுத்தறிவு வந்தது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். புரியாத வகையில் கவிதை எழுத தொடங்கி விட்டேன். நானும் கவிஞனோ???