Saturday, September 22, 2007

விக்கல் - சிறு(சுழற்சி)கதை

சுந்தரத்திற்கு விக்கலெடுத்தது. 'மனைவி நினைப்பாளா? மகன் நினைப்பானா?' என்று யோசித்தார். 'மகனுக்குத்தான் கல்லூரியின் முதல் நாளாச்சே, அவன் எப்படி நினைப்பான்? அவள் தான் வீட்டில் இருந்து கொண்டு நான் சாப்பிட்டேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பாள்.'

சுந்தரத்தின் மனைவிக்கு விக்கலெடுத்தது. 'கணவனா? மகனா?' குழம்பினார். 'அவருக்குத்தான் அலுவலகம் சென்று விட்டால் வேலைதான் முதல் மனைவி. என் ஞாபகம் எப்படி இருக்கும்? சேகர்தான் நினைத்து இருப்பான். புது இடமல்லவா??'

சேகருக்கு விக்கலெடுத்தது. 'அம்மா, அப்பாவிற்கு என்னை நினைத்து பார்க்க எங்க நேரம் இருக்க போகுது?' என்று நினைத்தவாறே பெண்கள் பக்கம் திரும்பினான். அந்த நொடி வரை அந்த பக்கம் பார்த்து கொண்டிருந்த ஒருத்தி சடாரென்று திரும்பினாள். 'அவள் இன்று காலையில் நான் பைக்கில் வரும்போது பார்த்த தேஜா ஆச்சே!!! அவளா நினைத்து இருப்பாள்??'

தேஜாவிற்கு விக்கலெடுத்தது. 'ஆஹா!!! டெலிபதியில் நான் அனுப்பிய செய்தி ஆகாஷிற்கு கிடைத்து விட்டதா? அழகாய் இருக்கிறான். அழகாய் பைக் ஓட்டுகிறான். அவனை பார்க்கும்போது அவன் பக்கத்தில் இருக்கும் சேகர்தான் அடிக்கடி கெடுக்கிறான். ஆகாஷ், என்னை ஜெயித்து விட்டாய்.'

ஆகாஷிற்கு விக்கலெடுத்தது. 'யாராக இருக்கும்? சுனாமியில் என் அம்மா, அப்பா இறந்து போன பின்னரும், என்னை தன் பிள்ளையாக நினைத்து வளர்க்கும் சுந்தர் சார்தான் நினைப்பார். அவர் பையன், ஆகாஷால் ஊனத்தின் காரணமாக பைக் ஓட்ட முடியாததால் என்னை பைக் ஓட்ட சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அதனால், நான் நல்லபடியாக கூட்டி கொண்டு வந்து இருப்பேனா, இல்லையா என்று நினைத்து கொண்டு இருப்பார். சுந்தரம் சார், உங்கள் பையனை உங்களை விட நன்றாக பார்த்து கொள்வேன்...'
(கதையை திரும்ப முதலில் இருந்து படிக்கவும்.)

பின்குறிப்பு:
இந்த கதைக்கு முடிவு கிடையாது. சுழன்று கொண்டே இருக்கும். அடிக்க நினைப்பவர்கள் மட்டும் பின்னூட்டமிடவும்.

1 comment:

prem said...

அருமை.. ஒவ்வொருவரும் பாசதிற்காக ஏங்குகிறோம். பாசத்துடன் வாழ்வதும் இன்னொருவரிடம் பாசத்தை புரிய வைப்பதிலும் வேதனையை சுமந்து வாழ்கிறோம். ஆனால் இந்த சுழற்சியில் நம்மீது பாசம் காட்டுபவரை புரிந்து கொள்வதே இல்லை... அந்த பாசத்தை புரிந்து கொள்ளாமல், நாம் ஏங்குபருக்காகவே வேதனை படுகிறோம்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் க்னான தங்கமே !!!!